

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே தாமோதரஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட மொள்ளம்பட்டி செட்டி கொட்டாய் கிராமத்தில் அமைந்துள்ள கெங்கை புத்து மகமாயி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு புனர்வர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆன்மிக விழாவிற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் எம்.எஸ். பிரபாகரன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர். விழாவில் கவுண்டர் கோம்பு குடும்பங்களைச் சேர்ந்த பங்காளிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாலக்கோடு ஸ்ரீ வித்யா காமாக்ஷி வேதாகம வித்யாலயத்தைச் சேர்ந்த வேத விற்பன்னர்கள் சிவஸ்ரீ ஈசானசிவம், காசிஸ்ரீ சரவண பவானந்த சிவம், சிவஸ்ரீ அருணாச்சல சந்துரு சிவம் ஆகியோர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ஆகம விதிப்படி கும்பாபிஷேக நிகழ்வுகளை நடத்தி வைத்தனர்.
விழாவையொட்டி விக்னேஸ்வர பூஜை, புன்யாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்கு ரார்ப்பணம், கலாகர்ஷணம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. மேலும், தென் பெண்ணை ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் அழைத்து வரப்பட்டு கரிக்கோல ஊர்வலம் நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலை பூஜைகள், எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன ரத்தின ஸ்தாபனம் மற்றும் மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை சுவாதி நட்சத்திரம் மற்றும் அமிர்த யோகம் கூடிய சுபவேளையில், யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித கடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.