

திருப்பூர் நல்லூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஆனி தேர்த்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. கடந்த 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினமும் காலை, சந்திரசேகரர் - மனோன்மணி அம்மன் உற்சவமூர்த்திகள் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மாலையில், சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்து வருகிறார். 5-ம் நாளான நேற்று முன்தினம் இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து தேர்வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நேற்று காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகமும், மாலையில் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருமணக்கோலத்துடன், வெள்ளை யானை வாகனத்தில், சோமாஸ்கந்தர் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை சோமாஸ்கந்தர், விநாயகர் தேர்களில் எழுந்தருளினர். மாலை 5மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தில் பங்கேற்க திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர். இதனால் கோவில் பகுதி களை கட்டியுள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 300 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு முதல் தேரோட்டம் நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாளை 30-ந்தேதி மாலை பரிவேட்டை, 1-ந்தேதி தெப்போற்சவம், 2-ந்தேதி நடராஜர் தரிசன காட்சி, 3-ந்தேதி மஞ்சள்நீர் விழா, 4-ந்தேதி விடையாற்று உற்சவ பூஜைகளுடன் விழா நிறைவடைகிறது.
தேரோட்டத்தையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கைலாய சிவவாத்தியம், கும்மி நிகழ்ச்சி, பெருஞ்ச லங்கையாட்டம், காராளன் கம்பத்தாட்டம், ஒயிலாட்டம்,காவடியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நாட்டிய நாடகம் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், செயல் அலுவலர் அருள்செல்வன், அறங்காவலர் குழு தலைவர் முருகேசன் மற்றும் அறங்காவலர்கள், அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்துள்ளனர்.