மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

பிப்ரவரி 18-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரை மாசிப் பெருவிழா நடைபெற உள்ளது. மாசி மாத அமாவாசையான 19-ந்தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது
ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ் வரி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி தை மாதத்திற்கான அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவ பெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம் விபூதி, பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு காமாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகா ரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இரவு 11 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை, மேள தாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தினர்.பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடியவுடன் அம்மன் ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி அருள்பாலித்தார்.

இதைக்கண்ட பக்தர்கள் கற்பூர தீபாரதனைக் காண்பித்தனர். இரவு 12 மணிக்கு அம்மனுக்கு குங்குமம் மற்றும் பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்பு அம்மன் உட்பிரகாரத்தில் வலம் வந்தவுடன் நிலையை அடைந்தார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களி லிருந்தும் பெங்களூர், புதுச்சேரியிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராம லிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசாரும், மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சாம வண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் செய்திருந்தனர்.

அடுத்த மாதம் 18-ந் தேதி முதல் மார்ச் மாதம் 2-ந் தேதி வரை மாசிப் பெருவிழா நடைபெற உள்ளது. ஆகையால் மாசி மாத அமாவாசையான 19-ந் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது என்பதும் அன்றைய தினம் காலையில் மயானக் கொள்ளை விழாவும் இரவு ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com