காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது

நாளை சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.3-ந்தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சியளித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது
Published on

காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதை தொடர்ந்து காரைக்கால் ஆற்றங்கரையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இருந்து, பரமதத்த செட்டியார் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவல் குழு தலைவர் வக்கீல் வெற்றிச்செல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கீல் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி மற்றும் உபயதாரர்கள், விழா கமிட்டி உறுப்பினர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஸ்ரீ புனிதவதியார் தீர்த்தகரைக்கு வரும் நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபம் வரும் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கும் பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாணமும் நடக்கிறது.

மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர் வெள்ளை சாத்தி புறப்பாடும், இரவு 10 மணிக்கு புனிதவதியாரும், பரமதத்த செட்டியாரும் முத்து சிவிகையில் வீதியுலாவும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

அப்போது பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில், வீட்டுமாடி, வாசல்களில் இருந்து மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

தொடர்ந்து மாலை காரைக்கால் அம்மையார் கோவிலை வந்தடையும் பிச்சாண்டவரை அம்மையார் எதிர்கொண்டு வரவேற்று அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சியும், 3-ந்தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சியளித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com