ஆடி அமாவாசையையொட்டி மகா பிரத்யங்கரா தேவி பூஜை

கணபதி பூஜை, மகாலட்சுமி பூஜையுடன் யாகம் தொடங்கியது. 100-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு கோ பூஜை நடந்தது.
ஆடி அமாவாசையையொட்டி மகா பிரத்யங்கரா தேவி பூஜை
Published on

சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லாத்தான்பாறையில் ஆதிபரஞ்சோதி சகலோக சபை கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று இரவு மகா பிரத்யங்கரா தேவி பூஜை, நரசிம்ம பூஜை நடைபெற்றது. இந்த பூஜையை கோவில் நிர்வாகி திருவேங்கட ஜோதபட்டாச்சாரியார் தலைமை தாங்கி நடத்தினார். இதையொட்டி பிரத்யங்கராதேவி, நரசிம்ம சுவாமிகளுக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

கணபதி பூஜை, மகாலட்சுமி பூஜையுடன் யாகம் தொடங்கியது. பின்னர் குண்டத்தில் தீ வளர்க்கப்பட்டு அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய காய்ந்த மிளகாய்கள், வெண் கடுகு, மாங்காய் ஆகியவை கொட்டப்பட்டு மந்திரங்கள் முழங்கப்பட்டன. இதையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரத்யங்கரா தேவிக்கு பூஜை நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, கோவை, திருப்பூர், உடுமலைபேட்டை சென்னை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் வேண்டுதல்களை பனை ஓலை மற்றும் காகிதத்தில் எழுதி யாககுண்டத்தில் போட்டு எலுமிச்சை பழங்களை சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தியும் வழிபட்டனர்.

இந்த பூஜையில் வெளிமாநில, வெளிநாட்டு பக்தர்கள் இணையம் வழியாக பங்கேற்றனர். முன்னதாக நேற்று காலை அங்குள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் சிறப்பு பூஜையில் கோசாலையில் வளர்க்கப்பட்டு வரும் 100-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு கோ பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்ட பசுக்களுக்கு அகத்திகீரை, தவிடு, மாட்டு தீவனங்கள் கொடுத்து வழிபட்டனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com