என் மலர்
வழிபாடு

வேண்டும் வரம் தரும் கொங்கலம்மன்
- கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அழகாக காட்சி அளிக்கிறது.
- ஈரோடு மக்கள் புதிதாக ஒரு அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட தொடங்கினர்.
கொங்கலம்மன் கோவில், ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான ஆலயமாகும். இந்த கோவில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதாகவும், பின்னர் வந்த மன்னர்கள் கொங்கலம்மனை தங்கள் குல தெய்வமாக வணங்கி வந்ததாகவும் கோவில் தல வரலாறு கூறுகிறது.
ஒரு சமயம் கொள்ளையர்கள் சிலர் இக்கோவிலில் இருந்த கொங்கலம்மன் சிலையை மாட்டு வண்டியில் திருடிச் சென்றனர். அவர்கள் ஆனங்கூர் என்ற இடத்துக்கு அருகில் வந்தபோது, வண்டியின் அச்சு முறிந்துபோனது. மேலும், "என்னை திருடிச் சென்றால் உங்களுக்கு ஆபத்து" என்று அசரீரி ஒலித்தது. இதைக் கேட்ட கொள்ளையர்கள் பயந்துபோய் அம்மன் சிலையை அங்கேயே விட்டுச் சென்றனர்.
மறுநாள் காலையில் இந்த சிலையை பார்த்த ஆனங்கூர் மக்கள் பரவசமடைந்தனர். பின்னர் அந்த சிலையை அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட தொடங்கினர். இதைக் கேள்விப்பட்ட ஈரோடு மக்கள், ஆனங்கூர் சென்று கொங்கலம்மனை வழிபட்டனர். இந்த அம்மன், 'ஆதி கொங்கலம்மன்' என்று அழைக்கப்படுகிறார். இவர் சூலம், உடுக்கை, பாம்பு, வேதம், மணி, கபாலம் போன்றவை ஏந்தி 12 திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இதையடுத்து ஈரோடு மக்கள் புதிதாக ஒரு அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட தொடங்கினர்.
கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அழகாக காட்சி அளிக்கிறது. கோவிலின் உள்ளே நுழைந்தால் பலிபீடம், கொடிமரம், சிம்ம வாகனம் காணப்படுகின்றன. கோவில் மகாமண்டபத்தில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் 6 கல் தூண்கள் உள்ளன. கருவறையில் கருணை நாயகியாக எட்டு திருக்கரங்களுடன் கொங்கலம்மன் காட்சி தருகிறார். இவர் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்து அருள்பாலிக்கிறார்.
கோவிலில் மகிஷாசுரமர்த்தினி, மதுரை வீரன், கருப்பண்ணசாமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, கவுமாரி, சப்த கன்னியர், பேச்சியம்மன் ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் உள்ளன. கோவிலின் தல விருட்சமாக அரச மரம், மலங்கிழுவை மரம், வில்வ மரம், மின்ன மரம், அத்தி மரம் என ஐந்து மரங்கள் உள்ளன.
செவ்வாய்க்கிழமை தோறும் இங்குள்ள பிரத்தியங்கிரா தேவி சன்னிதியில் தேவிக்கு பச்சை மிளகாய் அர்ச்சனை செய்யப்படுகிறது.
இக்கோவில், ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள மணிக்கூண்டு பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.






