

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை மிகப்பெரிய ஆன்மிக தலமாகும். காவிரி மற்றும் பவானி ஆற்றுடன் கண்ணுக்கு புலப்படாத அமுதநதியும் கலந்து திருநணா அல்லது திரிவேணி சங்கம் என்ற பெயரில் பவானி கூடுதுறை திகழ்கிறது. கூடுதுறையில் புனித நீராடி, சங்கமேஸ்வரரை தரிசித்தால், 108 சிவத்தலங்களுக்கு சென்று வரும் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தனை சிறப்பு மிக்க பவானியில் காவிரிக்கரையில் வடக்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் செல்லியாண்டியம்மன். பவானி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார் செல்லியாண்டியம்மன்.
இந்த கோவில் பொங்கல் மற்றும் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. செல்லியாண்டியம்மன் கோவிலுடன், பவானியில் உள்ள மாரியம்மன், எல்லையம்மன் வகையறா கோவில்களிலும் திருவிழா தொடங்கியது. 3 கோவில்களிலும் பூச்சாட்டு நடைபெற்றது.
21-ந் தேதி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து 22-ந் தேதி செல்லியாண்டியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடந்தது. கடந்த 28-ந் தேதி செல்லியாண்டியம்மனுக்கு பக்தர்கள் நீராட்டு நடத்தி புகழ் பெற்ற வழிபாடு நடைபெற்றது. தாயாக இருந்து அருள்பாலிக்கும் செல்லியாண்டியம்மன் கருவறை பெண்கள் அனுமதிக்கப்பட்டு, அவர்கள் கொண்டு வரும் புனித நீர், பால், மஞ்சள் நீர் கொண்டு செல்லியாண்டியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அதிகாலை 1 மணிக்கு தொடங்கிய இந்த வழிபாடு பகல் 12 மணிவரை நடந்தது. அதைத்தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்தார்கள்.
நேற்று விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் அழைத்தல் (அம்மை அழைத்தல்) வழிபாடு நடந்தது. காலை 10 மணிக்கு செல்லியாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. கோவில் முக்கிய பிரமுகர்கள் கோவிலில் இருந்து குதிரையுடன் புறப்பட்டு பவானி நகரின் எல்லையில் உள்ள எல்லையம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றதுடன், குதிரைக்கும் பூஜை செய்யப்பட்டது. பின்னர் அம்மன் அழைத்தல் வழிபாடு நடந்தது. பகல் 11.30 மணி அளவில் குதிரை துளுக்கியது. இதனால் அம்மன் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து படைக்கல ஊர்வலம் தொடங்கியது.
ஊர்வலத்தையொட்டி பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் பவானியில் கூடினார்கள். எல்லையம்மன் கோவில் முதல், செல்லியாண்டியம்மன் கோவில்வரை பக்தர்கள் சாலையில் திரண்டனர்.
இந்த ஊர்வலத்தின் போது பக்தர்கள் தங்கள் உடலில் சேறு பூசிக்கொள்வது வழக்கம். அதாவது பவானி கூடுதுறையை ஒட்டி உள்ள பவானி நகரம் தொன்று தொட்டே ஆன்மிகத்தலமாக உள்ளது. இங்கு மண்ணுக்கு அடியில் முழுவதும் சிவலிங்கங்கள் உள்ளன என்பது நம்பிக்கை. எனவே செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழாவின்போது நடைபெறும் அம்மன் அழைப்பின் போது பவானி நகரத்து மண்ணையே தண்ணீரில் குழைத்து தங்கள் உடலில் திருநீறாக பூசிக்கொள்ளும் வழக்கம் தொன்று தொட்டே இருந்தது.
அதை இன்னும் கடைபிடிக்கும் வகையில் நேற்று படைக்கலம் மற்றும் குதிரை ஊர்வலம் தொடங்கியது முதலே பக்தர்கள் சாலையில் புரண்டும், சாலையோரத்தில் இருந்து மண்ணை தண்ணீரில் குழைத்தும் தங்கள் உடல் முழுவதும் பூசிக்கொண்டு சேற்று மனிதர்களாக வலம் வந்தனர். இளைய தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் பலரும் தங்கள் உடலில் அலுமினிய நிற பெயிண்ட்டை தலைமுதல் பாதம் வரை பூசிக்கொண்டு ஊர்வலத்தில் பங்கேற்றனர். சிலர் உடல் முழுவதும் வண்ண சாயங்களை பூசிக்கொண்டும் நடமாடினார்கள்.
சிவன்-பார்வதி வேடம், பத்ரகாளியம்மன் கோவில் வேடம், தேவர்கள், முனிவர்கள் வேடம், காட்டேரி, பிசாசு வேடம் என்று பல்வேறு வேடங்களை அணிந்துகொண்டு பக்தர்கள் வந்தனர். இவர்கள் நேர்ச்சை கடனுக்காக இதுபோன்று வேடமிட்டு வருவதாக தெரிவித்தனர். வாலிபர் ஒருவர் செல்போன்களால் வரும் தீமைகளை விளக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசார பெட்டியை உடலில் அணிந்துகொண்டு, முகத்தில் பெயிண்டுடன் வலம் வந்தார். சிறுமி ஒருவர் புலிவேடம் அணிந்து ஆடியது அனைவரையும் கவர்ந்தது.
அந்தியூர் பிரிவு பகுதியில் பக்தர்கள் உடலில் சேறு பூசிக்கொள்ள வசதியாக மண்கொட்டப்பட்டு இருந்தது. சில நிமிடங்களிலேயே பக்தர்கள் மண்ணை உடலில் பூசிக்கொண்டு சாலையில் உற்சாக ஆட்டம் போட்டனர். ஆண்கள் மற்றும் சிறுவர்கள் உடல் முழுவதும் சேற்றை பூசிக்கொண்டு உற்சாகமாக வலம் வந்துகொண்டிருக்க பெண்களும் சாலையோரத்தில் இருந்து சேற்றை எடுத்து நெற்றியில் திருநீறாக பூசிக்கொண்டனர்.
செல்லியாண்டியம்மனுக்கு வேண்டுதல் வைத்த பக்தர்கள் படைக்கலம் வரும் வழிநெடுகிலும் உப்பு-மிளகு கலந்து வீசினார்கள். உப்புடன் சில்லரை காசுகளையும் கலந்து வீசி எறிந்தனர். எனவே சேறு பூசிக்கொண்டு சாலையில் வலம் வந்த பக்தர்கள் அந்த காசினை புனித காசாக சேகரித்தனர்.
இதில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு முண்டியடித்தனர். இதுபோல் கடைவீதியில் காய்கறி, பழங்கள், கோழி, பிஸ்கெட், இனிப்புகள் என்று பல்வேறு உணவு பொருட்களையும் வீசினார்கள். அனைத்தையும் பக்தர்கள் சேகரித்தனர். சிலர் புதிய உடைகள், ஜமுக்காளம், தலையணை, படுக்கை விரிப்பு உள்ளிட்ட துணிகளையும் வீசினார்கள். இதனால் பக்தர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு பொருட்களை சேகரித்தனர்.
காய்கறிக்கடை சந்தை வியாபாரிகள் காய்கறிகளையே மாலை, கிரீடம் என்று பலவகை அலங்காரங்களாக செய்து அணிந்து சென்றனர். பக்தர்களுக்கு நீர்மோர், கூழ் வழங்கப்பட்டது. வெயிலுக்கு இதமாக அவற்றை சாப்பிட்டும், சாலையில் ஊற்றிய தண்ணீரில் உற்சாக குளியல் போட்டும் மகிழ்ந்தனர்.
எல்லையம்மன் கோவிலில் இருந்து, செல்லியாண்டியம்மன்கோவில் வரை பக்தர்கள் தேங்காய், பழம் வைத்துக்கொண்டு பூஜை செய்ய காத்திருந்தனர். படைக்கலம் மற்றும் குதிரை வந்தஉடன் படைக்கலம் சுமந்து வந்தவர் மற்றும் குதிரையுடன் வந்தவர்களுக்கு கால்களில் தண்ணீர் விட்டு வழிபாடு செய்தனர். தேங்காய் உடைத்து கற்பூரம் ஏந்தி பூஜை செய்யப்பட்டது. அனைவருக்கும் பிரசாதமாக திருநீறு, குங்குமம் வழங்கப்பட்டது. காலை 11.30 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் பிற்பகல் 3.30 மணிக்கு கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜையுடன் ஊர்வலம் நிறைவடைந்தது.
தொடர்ந்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு கம்பம் பிடுங்கி ஆற்றில் விடப்பட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு பரிவேட்டை, 4-ந் தேதி இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் வழிபாடுகள் நடக்கின்றன. 5-ந் தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டம் நடக்கிறது.
விழாவையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் பொன்னம்மாள், சண்முகசுந்தரம், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.