

சக்தி வழிபாடுகளில் திரிசூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லா கோவில்களிலும் அம்மனுக்கு கையில் திரிசூலம் வைக்கப்பட்டு இருக்கும். இது அனைவரும் அறிந்ததே. ஆனால் சைவ சமயத்தில் முக்கிய கரு பொருளாகவும் தெய்வங்களின் வல்லமையை குறிக்கும் ஆயுதமாகவும் இந்த திரிசூலம் கருதப்படுகிறது.
இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்தியின் தண்மையை இந்த மூன்று கூர்மை பகுதி குறிக்கிறது. ஆணவம், கன்மம், மாயை போன்ற மும்மலங்களையும் அழித்து, முக்தியை தரக்கூடியது இந்த திரிசூல வழிபாடு. தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு போன்ற உலோகத்தினால் சூலம் வைத்து வழிபடலாம்.
ஒருவர் தமது விருப்பத்திற்கேற்பவும் வசதிக்கேற்பவும் திரிசூலத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். இருப்பினும் உயரம் சற்று சிறியதாக இருப்பது நலம். வீட்டில் சுவாமி சிலைகள் வைத்து வழிபடுபவர்கள் அதன் உயரத்திற்கு எதுவாக வைக்கலாம். அளவில் சிறியதாக இருந்தால், பூஜை செய்யவும் பூக்களால் அலங்காரம் செய்யவும் ஏதுவாக இருக்கும்.
தினசரி அல்லது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலாவது சூலத்திற்கு அபிஷேகம் செய்து சந்தனம் குங்குமம் போன்றவற்றால் அலங்கரித்து மலரிட்டு பூஜை செய்து வழிபடுதல் வேண்டும்.
இவ்வாறாக வழிபாடு செய்யும் போது தீய சக்திகள் விலகி எதிர்மறை எண்ணங்கள் நீங்கி வாழ்வில் நிம்மதி அடைவர்.
சூலம் ஒரு ஆயுதமே ஆயினும் அதனை எய்து போர் செய்ய ஒருவர் வேண்டும். அவ்வகையில் சூலத்தில் அம்பிகையும் சிவனும் குடியிருப்பது அவசியம். அதற்கு மேலே கூறியது போன்ற முறையான வழிபாடு என்பதும் அவசியமாகும். கிடப்பில் போட்டு வைப்பது என்பது தவறாகும். அவ்வாறு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் சூலமே ஒருவர்க்கு கடும் சோதனைகளை தரும்.
இதுகுறித்து பயம் கொள்ளத்தேவையில்லை. மனதை பக்குவப்படுத்தி தெளிவாகவும் பக்தியுடனும் வழிபாடு செய்ய வாழ்வில் பல மாற்றங்கள் நடைபெறுவதை அன்றாடம் காணலாம்.
சிவனை வழிபாடுபவர்களும் சக்தியை வழிபடுவர்களும் திரிசூலத்தை தமது வழிபாட்டுடன் இணைப்பது இன்னும் சிறப்பு வாய்ந்ததாகும்.
சுவாமியின் மேல் சாற்றி வைப்பது நலம். சுவாமி சிலைகள் இல்லையெனில் புகைப்படங்களில் சாற்றி வைக்கலாம். அதுவும் இல்லையெனில் நெல்லை ஒரு பாத்திரத்தில் (சொம்பில்) வைத்து அதில் சூலத்தை வைத்து வழிபடலாம். குழந்தையை போல் எண்ணி வழிபடுவது அழகு. தாயும் தந்தையாக ஓடி வந்து அருளை புரிவார்கள் அம்மையும் அப்பனும்.
ஓம் நமசிவாய போற்றி! ஓம் ஆம்பிகையே போற்றி!