ஆறு விரல்கள் கொண்ட சுந்தர மகாலட்சுமி

பெருமாள் திருக்கரத்தில் தாமரை மொட்டு காணப்படுகிறது. இதனால் இறைவன் 'கமல வரதராஜப் பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார்.
ஆறு விரல்கள் கொண்ட சுந்தர மகாலட்சுமி
Published on

செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றங்கரையில் அரசர் கோவில் எனுமிடத்தில் அமைந்துள்ளது, சுந்தர மகாலட்சுமி சமேத கமல வரதராஜப் பெருமாள் கோவில். இங்கு அருள்பாலிக்கும் சுந்தர மகாலட்சுமி தாயாரின் வலது காலில் ஆறு விரல்கள் இருப்பது அபூர்வ காட்சியாகும்.

தல வரலாறு

ஒரு சமயம் நான்முகனான பிரம்மன், தனக்கு ஏற்பட்டிருந்த சாபம் நீங்க முனிவர்களிடம் ஆலோசனைக் கேட்டார். அதற்கு 'விண்ணாளும் விஷ்ணுவும், மண்ணாளும் வேந்தனும்' சேர்ந்து எந்த இடத்தில் காட்சி தருகிறார்களோ, அங்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்றனர். பிரம்மனுக்கு சாபவிமோசனம் அளிக்க விரும்பிய விஷ்ணு பகவான் இத்தலத்தில் எழுந்தருளினார். அதேசமயம் புனித யாத்திரையாக பயணித்துக் கொண்டிருந்த ஜனக மகாராஜாவும் இத்தலம் வழியாக வந்தார். இதை அறிந்த பிரம்மன், இத்தலம் வந்து பெருமாளை நோக்கி தவம் இயற்றி, இருவரையும் ஒருசேர தரிசித்து சாபவிமோசனம் பெற்றார்.

ஜனகர், பெருமாளுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். ஒரு நாள் ஜனகர் வேலை காரணமாக வெளியே சென்றதால் பூஜை செய்யமுடியவில்லை. அப்போது பெருமாளே, மன்னன் பூஜை செய்வது போன்று சிம்மாசனத்தில் அமர்ந்து பூஜை செய்தார். மன்னன் திரும்பி வந்து பார்த்தபோது, பூஜை செய்ததற்கான தடயங்கள் இருந்தன. தான் செய்யவேண்டிய பூஜையை பெருமாளே செய்தது அறிந்து மெய்சிலிர்த்தார்.

ஆனால் பக்தனான மன்னனின் இருப்பிடம் சென்று பெருமாள் பூஜை செய்ததை அறிந்து மகாலட்சுமி கோபம் கொண்டார். அப்போது மகாவிஷ்ணு, 'இங்கு எழும் ஆலயத்தில் உனக்கே முதல் மரியாதை. உன்னை வழிபடுபவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்' என அருள்புரிந்து மகாலட்சுமியை சமாதானம் செய்தார். இதனால் மனம் மகிழ்ந்த மகாலட்சுமி, “தாமரையில் வசிக்கும் என் சார்பாக, தாங்கள் தங்கள் திருக்கரத்தில் தாமரை மொட்டு ஏந்தி அருள்பாலிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அதன்படியே இத்தலத்தில் அருளும் பெருமாள் திருக்கரத்தில் தாமரை மொட்டு காணப்படுகிறது. இதனால் இறைவன் 'கமல வரதராஜப் பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார்.

கோவில் அமைப்பு

கோவிலுக்குள் நுழைந்ததும் முதலில் பலி பீடம், கருடாழ்வார் சன்னிதி காணப்படுகிறது. அடுத்ததாக, இருபத்திநான்கு தூண்கள் கொண்ட கலைநயமிக்க ஒரு மண்டபம் உள்ளது. அதைத் தொடர்ந்து சென்றால் அர்த்தமண்டபமும், கருவறையும் அமைந்துள்ளது. கருவறையில் கமல வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவரின் வலது கரத்தில் தாமரை மொட்டு காணப்படுகிறது. தாயார் சுந்தர மகாலட்சுமி கிழக்கு நோக்கிய தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இவர் மேல் இரு கரங்களில் தாமரை மலர் ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரை காட்டியும் தாமரைப் பீடத்தில் பத்மாசன கோலத்தில் காட்சி தருகிறார்.

சுந்தர மகாலட்சுமி

தாயாரின் வலது பாதத்தில் சுண்டு விரலை அடுத்து ஆறாவதாக ஒரு விரல் அமைந்துள்ளது சிறப்பாகும். இந்த அன்னையை வழிபட்டால் வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் தாயாரை வணங்கிய பின்னரே, பெருமாளை வணங்க வேண்டும் என்பது மரபாக உள்ளது.

தாயாரின் கருவறை கோஷ்டத்தில் யோகநரசிம்மர், குபேரன், காளிங்க நர்த்தன கண்ணன், பரமபதநாதர், திரிவிக்ரமர் ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். தாயாரின் சன்னிதிக்கு வெளியில் இடதுபுறமாக பலாப்பழம் ஏந்திய 'பலாப்பழ சித்தர்” ஒருவரின் சிற்பம் உள்ளது. அந்த சித்தர், தினமும் அன்னைக்கு பலாப்பழம் படைத்து வழிபட்டுள்ளார். எனவே அபிஷேகத்தின்போது, அன்னைக்கு பலாச் சுளைகளால் அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கு ஆண்டாளுக்கு தனிச் சன்னிதியும் காணப்படுகிறது. கோவில் தல விருட்சமாக அரச மரம் உள்ளது.

அமைவிடம்

செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில் படாளம் கூட்டு ரோட்டில் இருந்து இடது பக்கம் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. படாளம் ரெயில் நிலையத்தில் இருந்து 3.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com