புதுமைகள் நிகழ்த்தும் புனித அந்தோணியார் ஆலயம்

தோல் வியாதியால் அவதிப்படுபவர்கள் உப்பு, மிளகு வாங்கி வைத்து அந்தோணியாரை வழிபடுகின்றனர்.
St Antony's Church
Published on

மதுரையில் எண்ணற்ற பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் பழைய குயவர்பாளையத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம். இந்த ஆலயத்திற்கு மதுரை மாவட்டம் மட்டுமின்றி சிவகங்கை உள்பட அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் எண்ணற்ற பேர் வருகின்றனர்.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 13 நாட்கள் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அந்தோணியாருக்கு மிகவும் பிடித்த எண் 13. ஆதலால் இங்கு என்ன நிகழ்வு நடைபெற்றாலும் 13 எண்ணை அடிப்படையாக கொண்டு நடைபெறும். 13 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக 12-வது நாள் தேரோட்டம் நடக்கிறது. அதேபோல இந்த ஆலயத்தில் முதல் செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு திருப்பலி நடைபெறும். காணாமல் போன வாகனம், நகை, பணம் உள்ளிட்ட எந்தவொரு பொருட்களாக இருந்தாலும் இந்த ஆலயத்தில் உள்ள அந்தோணியாரை மனமுருக வேண்டினால் நிச்சயம் கிடைத்து விடும் என ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தேங்காயில் விளக்கு

குழந்தை வரம், கல்விச்செல்வம், வேலைவாய்ப்பு, திருமண பாக்கியம் உள்பட பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற 13 தேங்காய்களில் விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். அதேபோல 13 மெழுகுவர்த்தி ஏற்றியும் தங்கள் வேண்டுதல்களை அந்தோணியாரிடம் முறையிடுகின்றனர். தோல் வியாதியால் அவதிப்படுபவர்கள் உப்பு, மிளகு வாங்கி வைத்து அந்தோணியாரை வழிபடுகின்றனர்.

இவ்வாறு பக்தர்கள் வேண்டும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேறி, புதுமைகள் நிகழ்வதாக பக்தர்கள் கூறுகின்றன. இந்த ஆலயம் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து திருமங்கலம், திருப்பரங்குன்றம் செல்லும் நகர பஸ்சில் (பஸ் எண் 4-சி, 48) சென்றால் மிஷின் ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்லலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com