

அழகர்மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழா சிறப்பான ஒன்றாகும். இந்த விழா கடந்த 29-ந்தேதி தொடங்கி, காப்பு கட்டுதல், மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன.
அன்று முதல் தினமும் மாலை வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சாமி புறப்பாடு வருகிற 7-ந்தேதி வரை நடக்கிறது.
வைகாசி விசாகத்தையொட்டி (7-ந்தேதி) ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வருகின்றனர். அன்று முருகப்பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம், தேன், இளநீர், விபூதி உள்பட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.