பிள்ளைக்கறி விருந்து படைத்த சிறுத்தொண்டர்

சிறுத்தொண்டரின் பெருமையை உலகுக்கு அறிவிக்க எண்ணம் கொண்டார் சிவபெருமான்.
பிள்ளைக்கறி விருந்து படைத்த சிறுத்தொண்டர்
Published on

சோழ நாட்டிலுள்ள திருச்செங்காட்டங்குடி என்ற ஊரில் மாமாத்திரர் எனும் குலத்தில் தோன்றியவர் பரஞ்சோதியார். சிறந்த சிவபக்தர்.

பரஞ்சோதியார் தம் துணைவியார் திருவெண்காட்டு நங்கையாருடன் சேர்ந்து நல்லறம் புரிந்து வந்தார். சிவனடியார்களுக்குத் தினமும் விருந்தளித்த பின்னரே தாம் உண்பார். அடியவர்களிடத்திலே மிகச்சிறியராய் நடப்பதால் இவர் ‘சிறுத்தொண்டர்’ என அழைக்கப்பட்டார். சிறுத்தொண்டரின் மகன் சீராளன். அவன் கல்வி கற்கும் பருவம் வந்ததும் பாடசாலைக்குச் சென்றான்.

திருச்செங்காட்டங்குடிக்கு வருகை தந்த திருஞான சம்பந்தப் பெருமானை அன்புடன் உபசரித்து விருந்தளித்தார் சிறுத்தொண்டர். எனவே திருஞான சம்பந்தப் பெருமான் சிறுத்தொண்டரை தமது திருப்பதிகத்தில் பாடி சிறப்பித்தார்.

சிறுத்தொண்டரின் திருத்தொண்டுகள் கயிலையை அடைந்தன. எனவே சிறுத்தொண்டரின் பெருமையை உலகுக்கு அறிவிக்க எண்ணம் கொண்டார் சிவபெருமான்.

ஒருநாள் திருச்செங்காட்டங்குடிக்கு மிகவும் பசியால் வாடிய சிவனடியார் வேடத்தில் சிவபெருமான் வந்தார். சிறுத்தொண்டரின் வீடு எங்கே என விசாரித்து, அவரது வீட்டை அடைந்தார்.

வீட்டில் சிறுத்தொண்டரின் மனைவியிடம், “சிறுத்தொண்டர் வீட்டிலுள்ளாரா?” எனக் கேட்டார். அவரது மனைவியோ, “அடியவர்களுக்கு நாள்தோறும் அமுது செய்விப்பது வழக்கம். அவர் சிவனடியார்களைத் தேடிப் போயுள்ளார்’’ என்றார். உடனே சிவனடியார், “யாம் சிறுத்தொண்டரைக் காணவே வந்தேன். தான் கணபதீச்சரத்தில் உள்ள ஆத்திமரத்தின் கீழ் இருப்பேன். சிறுத்தொண்டரை அங்கு வந்து சந்திக்கும்படி சொல்லுங்கள்” என கூறிவிட்டுச் சென்றார்.

சிறுத்தொண்டர் வந்ததும் அவர் மனைவி நடந்ததைக்கூறி, அவரை அங்கு அனுப்பி வைத்தார். அடியாரைக் கண்ட சிறுத்தொண்டர், “அடிகளே! ஏழைக் குடிலுக்கு எழுந்தருளி, அமுது செய்தல் வேண்டும்” என முறையிட்டார்.

அதற்கு அவர், “எமக்கு அமுதளித்தல் உம்மால் இயலாது” என்றார். அதற்கு சிறுத்தொண்டர், “அடிகளின் உணவுமுறையை தெரிவியுங்கள். அவ்வாறே செய்விப்பேன்” என்றார். அதைக் கேட்ட சிவனடியார், “நாம் 6 மாதத்திற்கு ஒருமுறை உணவு கொள்ளும் இயல்பானோம். அந்நாள் இந்நாளாகும். இன்று நாம் உண்ணும் பசு நரப்பசுவாகும். அது 5 வயதுடையதாய், உறுப்பில் பழுதில்லாததாய், அதுவும் ஒரு குடிக்கு ஒருவனாய் இருக்கவேண்டும். அவனை தாய் உவந்து பிடிக்க, தந்தை உவந்தே அரிதல் வேண்டும். இவ்வாறு அரிந்து சமையல் செய்தால் நாம் உண்போம்” என்றார்.

சிறுத்தொண்டர், “இதொன்றும் எனக்கு அரிதன்று. திருவமுது செய்ய சம்மதித்தால் போதும்” என கூறிச்சென்றார்.

சிறுத்தொண்டர் பேரானந்தத்துடன் வீடு நோக்கி விரைந்து, நடந்தவற்றைக் கூறி தன் மனைவியிடம் சம்மதம் கேட்டு தம் பிள்ளையை பாடசாலையிலிருந்து அழைத்து வந்தார். அம்மையார் எதிர்சென்று பிள்ளையை வாங்கி பிள்ளையின் தலைமயிரைத் திருத்தி, முகம் துடைத்து அலங்கரித்தார். சீராளரும் தம் பெற்றோரின் மகிழ்ச்சிக்காக இசைந்தார். தன் பிள்ளையை மனைவி பிடித்துக்கொள்ள தானே அரிந்தார். மகிழ்ச்சியுடன் சிறுத்தொண்டர் செயற்கருஞ் செய்கை செய்தார்.

சிறுத்தொண்டர் சிவபெருமானாகிய அடியவரை அழைத்து வந்து சோற்றுடன் அவர் செய்த பிள்ளைக்கறியைப் படைத்தார். உடனே அடியார், “நான் தனியே உணவருந்த மாட்டேன். யாரேனும் சிவனடியார்களுடன் தான் உணவருந்துவேன்’’ என்றார்.

உடனே சிறுத்தொண்டர் வெளியில் போய் பார்க்க சிவனடியார்கள் ஒருவரும் கிடைக்கவில்லை. இதனை வருத்தத்துடன் சிவனடியாரிடம் கூற, ‘‘ஏன் நீரே சிவனடியார் போல்தான் உள்ளீர். எனவே நீங்களே என்னுடன் அமர்ந்து உணவருந்தலாம்’’ என்றார். உடனே சிறுத்தொண்டர், ‘நாம் உண்டால்தான் சிவனடியாரும் பிள்ளைக்கறியை உண்பார்’ என நினைத்து விரைந்துண்ண முயன்றார்.

அடியார், ‘‘தாம் தனியே உண்பது நன்றல்ல. உன் மகனையும் கூப்பிடு. அனைவரும் உண்போம்’’ என்றார். அதற்கு சிறுத்தொண்டர், ‘‘எனக்கு புதல்வன் உண்டு. ஆனால் அவன் இப்போது இங்கு உதவான்” என்று சொன்னார். அதற்கு அடியவர், ‘‘அவன் வந்தாலன்றி நாம் உண்ணோம். அவனைத் தேடி அழைத்து வாரும்” என்றார்.

சிறுத்தொண்டரும் அவர் மனைவியும் திருவருளை நினைந்து வெளியே போய், ‘‘மைந்தா! மணியே! சீராளா! வாராய்! வாராய்!” என்று ஓலமிட்டு அழைத்தனர்.

இறையருளால் சீராளன் பாடசாலையில் இருந்து ஓடி வருபவனைப் போல வந்தார். இருவரும் மகிழ்ந்து பிள்ளையை அணைத்தனர். உடனே உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அடியவரும் இல்லை. அவருக்கு படைத்த உணவுகளையும் காணவில்லை.

அப்போது சிவபெருமான் உமாதேவியாருடனும், முருகப் பெருமானுடனும் அவர்களுக்குக் காட்சியளித்து அருள் சுரந்து, தங்களைப் பிரியாத பெருவாழ்வு நல்கி, உடன் அழைத்துச் சென்றனர். அன்று முதல் இவர் ‘சிறுத்தொண்ட நாயனார்’ என அழைக்கப்பட்டார்.

சிறுத்தொண்ட நாயனாரின் திருநட்சத்திரம்: சித்திரை மாதம் - பரணி

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com