

பக்தன் பிரகலாதனை காக்கவும், அழிக்க முடியாதபடி அரிய வரங்களை பெற்ற இரணியகசிபு அரக்கனை அழிப்பதற்காகவும் அவதரித்தவர், நரசிம்மர். கடலூர் அருகே சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் நரசிம்மர், இரணியகசிபுவை வதம் செய்வதுபோல உக்கிர தோற்றத்தில் காட்சி தருகிறார்.
இக்கோவில், 6-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்பு, 10-ம் நூற்றாண்டில் ராஜராஜசோழனாலும், 16-ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயராலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆலயம் மேற்கு நோக்கிய அழகிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அழகுற காணப்படுகிறது. ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் இடதுபுறத்தில் வேப்ப மரத்தடியில் துர்க்கை சன்னிதியும், வலதுபுறத்தில் நாகர் சன்னிதியும் உள்ளன. அதனை ஒட்டியே தீர்த்தக்குளம் ஒன்றும் காணப்படுகிறது. அதைத் தாண்டி சென்றதும் கிழக்கு நோக்கியவாறு நாமமிட்ட விநாயகர் அருள்பாலிக்கிறார். இவரை தோப்புக்கரணம் இட்டு பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
அடுத்ததாக, கொடிமரம், பலிபீடம் ஆகியவை காட்சி அளிக்கின்றன. கருங்கல் தூண்களோடு கூடிய மண்டபத்தில் 'பெரிய திருவடி' என்ற திருநாமத்தில் கருடாழ்வார் உள்ளார். கோவில் வடக்கு வெளிச்சுற்றில் ஆண்டாள் சன்னிதியும், தெற்குச் சுற்றில் கனகவல்லி தாயார் சன்னிதியும் காணப்படுகின்றன. தாயார் சன்னிதியை அடுத்து தெற்கு நோக்கிய சன்னிதியில் ராமரின் ஐம்பொன் திருமேனி உள்ளது. அவரை சூழ்ந்து சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள்.
கருவறையில் 16 திருக்கரங்களுடன் இரணியனை வதம் செய்த கோலத்தில் நரசிம்மர் அருள்பாலிக்கிறார். இரணியனை மேற்கு திசை பார்த்தவாறு நரசிம்மர் வதம் செய்ததை குறிக்கும் வகையில், இங்கு உக்கிர தோற்றத்தில் மேற்கு திசை நோக்கி காட்சி தருகிறார். இவரது இரண்டு கரங்கள் இரணியனின் உடலை கிழித்தபடியும், மற்ற கரங்களில் பதாகஹஸ்தம், பிரயோக சக்கரம், ஷீரிகா எனும் குத்துக்கத்தி, பாணம், சங்கு, வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை ஆகியவற்றை ஏந்தியும், குடலை மாலையாகப் பிடிப்பது, இரணியனின் தலையை அழுத்தி பிடிப்பது போன்றும் உள்ளது.
நரசிம்மரின் இடதுபுறம் இரணியனின் மனைவி லீலாவதி, வலதுபுறம் மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்ரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர்.
கருவறையில் வடக்கு நோக்கி சிறிய வடிவில் யோக நரசிம்மரும், பால நரசிம்மரும் காணப்படுகிறார்கள். இவ்வாறு ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது தமிழகத்தில் இங்கு மட்டுமே என்பது தனிச் சிறப்பாகும்.
பாவன விமானத்தின் கீழ், உற்சவர் பிரகலாதவரதன், ஸ்ரீதேவி - பூதேவி தாயாருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் 12 ஆழ்வார்கள், விஷ்வக் சேனர், மணவாள மாமுனிகள், தும்பிக்கை ஆழ்வார், விஷ்ணு துர்க்கை, ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் தனிச் சன்னிதி காணப்படுகிறது. இங்கு ஜமதக்னி தீர்த்தம், இந்திர தீர்த்தம், வாமன தீர்த்தம், கருட தீர்த்தம், பிருகு தீர்த்தம் என ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. கோவில் தல விருட்சமாக வில்வமரம் உள்ளது. பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் இருந்து சுவாமி, தாயார், ஆண்டாள், கருடாழ்வார், ராஜகோபுரம், கருவறை விமானம், கொடிமரம் ஆகியவற்றை ஒருசேர தரிசிக்கலாம்.
சித்திரை மாதம் நரசிம்மர் ஜெயந்தி அன்று தேர்த்திருவிழா நடைபெறும். மாசி மகத்தன்று தீர்த்தவாரி, ஐப்பசியில் பவித்ர உற்சவம், வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பு, கருட சேவை போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும், மாலையில் கனகவல்லி தாயாருக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், மனநல பிரச்சனை உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வழிபட்டு செல்கிறார்கள். இங்கு வரும் பக்தர்கள், செவ்வாய்க்கிழமைதோறும் வேண்டுதல் நிறைவேற நெய்விளக்கு ஏற்றியும், துளசி அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள். இங்குள்ள நரசிம்மர் உக்கிரமாக காட்சி அளித்தாலும் பக்தர்களுக்கு கருணையுடன் அருள் வழங்குகிறார்.
சிங்கிரிகுடி, பூவரசன்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று நரசிம்மர் கோவில்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. எனவே இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அமைவிடம்
கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் தவளக்குப்பம் என்ற இடம் உள்ளது. அங்கிருந்து 1.5 கி.மீ. தொலைவில் சிங்கிரிகுடி நரசிம்மர் திருக்கோவில் அமைந்துள்ளது.