ராம நவமி தோன்றிய வரலாறு

இறைவன் தனது தெய்வீக சக்திகளைத் துறந்து சாதாரண மனிதனாக, பெற்றோருக்கு மகனாக வாழ்ந்து காட்டிய அவதாரம் ராமாவதாரம்.
ராம நவமி தோன்றிய வரலாறு
Published on

திருமாலின் அவதாரங்களில் சிறப்புமிக்கதாகவும், அறம் நிறைந்ததாகவும் உள்ளது ராமாவதாரம். இறைவன் தனது தெய்வீக சக்திகளைத் துறந்து சாதாரண மனிதனாக, பெற்றோருக்கு மகனாக வாழ்ந்து காட்டிய அவதாரம் இது.

அயோத்தி தேசத்தை தசரதன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். திசைகளை எண் திசைகளாக பிரிப்பார்கள். இந்த எண் திசைகளோடு, கீழ் திசை, மேல் திசையையும் சேர்த்து 10 திசைகளிலும் தன்னுடைய ரதத்தை திறம்பட செலுத்தக்கூடியவர் என்பதால் 'தசரதன்' என்ற பெயர் வந்தது. அவருக்கு கோசலை, சுமித்ரை, கைகேயி என்று மூன்று மனைவியர். இருப்பினும் தனக்கு அடுத்த நாட்டை ஆள பிள்ளை இல்லாததால் தசரதர் பெரும் கவலைகொண்டார்.

குழந்தைப்பேறு கிடைக்க வேண்டி ரிஷ்ய சிங்கர் என்ற முனிவரை அழைத்து வந்து 'புத்திர காமேஷ்டி யாகம் நடத்தும்படி பணித்தார். அதன்படியே ரிஷ்ய சிங்கரும் யாகம் செய்தார். யாக அக்னியில் இருந்து, ஒளி பொருந்திய ஒரு உருவம் தோன்றியது. அதன் கரங்களில் தங்க பாத்திரமும், அதனுள் பால் பாயசமும் இருந்தது. அந்த உருவம் தசரதரை நோக்கி “இந்த பாயசத்தை உனது மனைவிகளுக்கு பிரித்துக் கொடு. அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள்” எனக் கூறி மறைந்தது.

தசரத மகாராஜா, அந்த பாயசத்தில் பாதியை கவுசல்யாவிற்கு கொடுத்தார். மீதமுள்ள பாதியில் அரை பங்கை சுமித்திராவுக்கு கொடுத்தார். மேலும் மீதமிருந்ததில் பாதியை கைகேயிக்கு அளித்தார். அதன்பிறகும் எஞ்சிய பாயசத்தை மீண்டும் சுமித்திராவுக்கு கொடுத்தார். பாயசத்தில் பாதியை அருந்திய கவுசல்யாவுக்கு சித்திரை மாதம் வளர்பிறை புனர்பூச நட்சத்திரம் கடக ராசியில் கடக லக்னத்தில் நவமி திதியில் ராமபிரான் பிறந்தார். கைகேயிற்கு பூச நட்சத்திரம் கடக ராசி மீன லக்னத்தில் பரதன் பிறந்தான். இரண்டு முறை பாயசம் அருந்திய சுமித்தி ராவுக்கு ஆயில்யம் நட்சத்திரம் கடக ராசி கடக லக்னத்தில் லட்சுமணனும், சத்ருக்ணனும் பிறந்தனர். ராமர் பிறந்த தினத்தையே, நாம் 'ராம நவமி' என்று கொண்டாடுகிறோம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com