தொழிலில் லாபம் தரும் பரசுராமர்

மராட்டிய மன்னன் வீர சிவாஜி, அடிக்கடி இத்தலத்துக்கு வந்து வழிபட்டு சென்றுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
தொழிலில் லாபம் தரும் பரசுராமர்
Published on

மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக கருதப்படுபவர், பரசுராமர். இவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட தலம் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டம் சிப்லுன் பகுதியில் அமைந்துள்ள பரசு ராமர் கோவில். இங்கு அருள்பாலிக்கும் பரசுராமர், வித்தியாசமான தோற்றத்தில் விஷ்ணு, பிரம்மாவுடன் காட்சி அளிப்பது தனிச் சிறப்பாகும்.

ஒரு காலத்தில் இப்பகுதி மேய்ச்சல் நிலமாக இருந்தது. இங்கிருந்த புதர் ஒன்றில் பசு ஒன்று தினமும் பால் சுரந்து கொண்டிருந்தது. பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பரசுராமர், குறிப்பிட்ட இடத்தில் சுயம்பு வடிவில் தான் புதைந்திருப்பதாக உணர்த்தினார். அதன்படி, இவ்விடத்தில் கோவில் எழுப்பப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மேந்திர சுவாமி என்பவரால் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலயம் இந்து, முஸ்லிம் மற்றும் ஐரோப்பிய கட்டிடக் கலை பாணியின் கலவையில் அமையப்பெற்றுள்ளது. கருவறையில் பரசுராமர், வில், அம்பு, கோடரி ஏந்தியபடியும், லாப முத்திரை காட்டியபடியும் அருள்பாலிக்கிறார். அருகில் இருபுறமும் பிரம்மா, விஷ்ணு இருவரும் நான்கு திருக்கரங்களுடன் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறார்கள்.

வலம்புரி விநாயகர், அனுமன், கங்காதேவி, ரேணுகா தேவி ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. கோவிலுக்குள் 'பரசுராம் பான கங்கா' எனும் குளம் காணப்படுகிறது. இந்த குளத்தை பரசுராமர், தன் வில்லால் உருவாக்கியதாக கருதப்படுகிறது. பாவத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள், இந்த நீரை தலையில் தெளிக்கிறார்கள்.

மராட்டிய மன்னன் வீர சிவாஜி, அடிக்கடி இத்தலத்துக்கு வந்து வழிபட்டு சென்றுள்ளதாகவும் கூறுகிறார்கள். கோவிலுக்கு அருகில் வசிஷ்டி நதி ஓடுகிறது. லாப முத்திரையுடன் அருள்பாலிக்கும் பரசுராமரை வழிபட்டால் தொழிலில் லாபம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் சிப்லுன் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இக்கோவில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com