

பங்குனி மாதத்தில் வரும் மிக முக்கியமான சிறப்புக்குரிய நாள் பங்குனி உத்திரம்.
ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி நாள் முருகப் பெருமான் மற்றும் சிவபெருமானுடன் தொடர்புடைய வழிபாட்டு நாளாக கருதப்படுகிறது. ஆனால் பங்குனி மாத பவுர்ணமியான பங்குனி உத்திர தினம் முருகப் பெருமானுடன் அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற நாள் ஆகும்.
பங்குனி மாதத்தில் பவுர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் இந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டது இந்த நாளில் தான்.
முருகப்பெருமான் மட்டுமின்றி சிவன்-பார்வதி, ஸ்ரீராமர்- சீதை, ரங்கநாதர்-ஆண்டாள் என பல தெய்வீக திருமணங்கள் நடைபெற்றது பங்குனி உத்திரம் அன்று தான். இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் திருமண வரம் கிடைக்கும் என்பதால் தான் பங்குனி உத்திர விரதத்திற்கு கல்யாண விரதம் என்ற பெயரும் உண்டு.
பங்குனி உத்திரத்தன்று முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் காவடி, பால்குடம் ஏந்தி வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் திருமண வாழ்க்கையில் இருக்கும் தடைகள் நீங்கி, நல்ல வாழ்க்கை துணை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பங்குனி உத்திர விரதம் மேற்கொள்வதால் அரசு வேலை, பதவி உயர்வு போன்ற நன்மைகளும் கிடைக்கும்.
திருப்பதி கோவிலில் உள்ள 7 புனித குளங்களில் ஒன்றான தும்புரு தீர்த்தத்தில் லட்சக்கணக்கான தேவர்கள் நீராடுவார்கள். எனவே கோவில் குளத்தில் நீராடுவது நம்மை மறுபிறவி சுழற்சியிலிருந்து விடுவிப்பதாக நம்பப்படுகிறது. ஈசனின் தவத்தை கலைத்ததால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாள் பங்குனி உத்திரம். அர்ஜுனன் பிறந்ததும் இந்நாளில்தான். சுவாமி ஐயப்பனின் அவதாரத் திருநாளும் பங்குனி உத்திரத் திருநாளே.
பங்குனி உத்திர நாளில் தானம் கொடுப்பது, தர்ம செயல்களில் ஈடுபடுவது மிகவும் புண்ணியமான காரியமாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்வதால், நம்முடைய பாவங்கள் நீங்கி, நற்பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பங்குனி உத்திரத்தன்று திருவிளக்கு தீபத்தில், சிவபெருமானும் பார்வதி தேவியும் ஐக்கிய சொரூபமாக எழுந்தருள்வதாக ஐதீகம். ஆகவே அன்று அதிகாலை எழுந்து நீராடி, வீட்டில் விளக்கேற்றிவைத்து சிவ பெருமானை கல்யாண சுந்தரராக பாவித்து வணங்கவேண்டும்.
பங்குனி உத்திரம் அன்று திருமணம், சொத்துக்கள் வாங்குவது, வீடு கிரகபிரவேசம் செய்வது போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவதும் வழக்கமாக உள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் திருமண வரம் வேண்டி பங்குனி உத்திர நாளில் பலரும் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம்.
இந்த ஆண்டு பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் இன்று மாலை 3 மணி 20 நிமிடத்திற்கு தொடங்கி, நாளை மாலை 4 மணி 17 நிமிடத்திற்கு முடிவடைகிறது. பவுர்ணமி திதி நாளை காலை 7.38 மணி முதல் நாளை மறுநாள் காலை 7.57 மணி வரை உள்ளது. எனவே விரதம் இருந்து வழிபடுவோர் நாளை அதிகாலையில் இருந்து மாலை வரை வழிபடலாம். இந்த நேரத்தில் சிவாலயங்கள், பெருமாள் ஆலயங்கள், முருகன் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.