

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை பங்குனி தேரோட்டம் நடைபெற உள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பங்குனி பெருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில் தங்கமயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் அளிக்கின்றனர்.
சிகர நிகழ்ச்சியாக நேற்று இரவு சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மதியம் 12.10 மணிக்கு மீனாட்சி அம்மன் பிரியா விடையுடன் சுந்தரேசுவரர் முன்னிலையில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷமிட கோலாகலமாக நடந்தது.
முன்னதாக திருமணத்திற்காக மதுரையிலிருந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியா விடையுடன் திருப்பரங்குன்றம் நோக்கி வந்தனர். அவர்களை திருமண கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சந்திப்பு மண்டபத்தில் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சுவாமிகள் வழி எங்கும் பக்தர்கள் அமைத்த திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி கோவிலுக்கு சென்றனர். அங்கு ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்று தொடர்ந்து கோவில் ஆறுகால் மண்டபத்தில் முதலில் மீனாட்சியம்மன் எழுந்தருளினார்.
அதனைத் தொடர்ந்து சுந்தரேசுவரர் பிரியா விடையுடன் எழுந்தருள சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு வேத மந்திரங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷமிட சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.தொடர்ந்து வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் வள்ளி தேவசேனா மண்டபம் மற்றும் சஷ்டி மண்டபங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று இரவு மீனாட்சி சுந்தரேசுவரர் பல்லக்கிலும், சுப்பிரமணிய சுவாமி தங்க அம்பாரி வாகனத்திலும், தெய்வானை அம்மன் ஆனந்த ராயர் புஷ்ப பலத்திலும் எழுந்தருளி கோவில் சன்னதி தெருவில் உள்ள 16 கால் மண்டபத்தில் தீப ஆராதனைகள் முடிந்து மீனாட்சி சுந்தரேசுவரரை வழி அனுப்புதல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை காலை 6 மணி அளவில் கோவில் வாசலில் உள்ள பெரிய தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து ரத வீதிகள் மற்றும் கிரி வீதிகள் வழியாக சுவாமி சுற்றி வந்து அருள் பாலிப்பார்.