பிறவிப்பாவம் போக்கும் பாடி சிவன் கோவில் வரலாறு

Padi sivan temple
Published on

சென்னைக்கு அருகே பாடி எனும் இடத்தில் திருவலிதாயம் எனப்படும் திருவல்லீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானதாகும்.

தல வரலாறு:

பண்டைய காலத்தில் அரசர்கள் போருக்குச் செல்லும் முன் ஆயுதங்களை சேமித்து வைத்திருந்த இடங்கள் "பாடி வீடு" என்று அழைக்கப்பட்டன. அத்தகைய ஆயுதக் களஞ்சியமாக இந்தப் பகுதி விளங்கியுள்ளது. பின்னர் இது மருவி "பாடி" என்ற பெயர் நிலைத்துவிட்டது.

இத்தலத்தில் வலியன் எனும் கருங்குருவி வடிவில் முனிவர் ஒருவர் வந்து வழிபட்டதால் திருவலிதாயம் எனும் பெயர் வந்ததாக தலவரலாறு கூறுகிறது.

அதேபோல் இத்தலத்தில் வாலி சிவபெருமானை வழிபட்டதாகவும் புராணக்கதை உள்ளது. இதனால், இறைவன் வாலீஸ்வரர் (அ) திருவல்லீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

  • மூலவர் அருள்மிகு திருவல்லீஸ்வரர்.

  • அம்பாள் அருள்மிகு ஜெகதாம்பாள்.

  • தல விருட்சம்: கொன்றை மரம்.

  • தீர்த்தம்: பரத்வாஜ தீர்த்தம்.

தேவாரத் தலம்:

தேவாரப் பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் ஒன்றாக இக்கோவிலுக்கு உள்ளது. திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகிய நாயன்மார்கள் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.

குருவின் திருத்தலம்:

நவகிரகங்களில் ஒன்றான குருபகவானுக்கு தனி சன்னதி உள்ளது இக்கோவிலின் சிறப்பாகும். சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் குருவிற்கு என இத்தலம் போற்றப்படுகிறது. வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அல்லது மலகர்களால் குபகவானை வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.

சிறப்பு:

முருகனுக்கு என்று தனிச்சன்னதி உள்ளது. இங்கு முருகப்பெருமான் குருவின் அம்சமாக அருள்புரிகிறார். மேலும் இக்கோவிலில் ஆஞ்சநேயர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.

பரத்வாஜ முனிவர் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளார். ஆதலால் அவரின் பெயரினாலேயே இக்கோவிலின் குளமும் பரத்வாஜ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

இந்தக் கோவிலில் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் குரு பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றவை.

திருமணம் தடை, கல்வி முன்னேற்றம், குழந்தைப் பேறு மற்றும் தொழில் வளர்ச்சிக்காக பக்தர்கள் இங்கு வழிபாடு செய்யலாம்.

பயணம்:

சென்னையின் பல்வேறுபகுதிகளில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளது. கொரட்டூர் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ.தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 6:00 மணிமுதல் 12:00 மணி வரை
மாலை 4:30 மணிமுதல் 9:00 மணி வரை

X

Maalai Malar
www.maalaimalar.com