கண் பார்வை அருளும் கொடுவாய் நாகேஸ்வரசுவாமி

துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும் என்பது தனிச் சிறப்பாகும்.
கண் பார்வை அருளும் கொடுவாய் நாகேஸ்வரசுவாமி
Published on

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் -திருப்பூர் நெடுஞ்சாலையில் கொடுவாய் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. நாகேஸ்வரசுவாமி கோவில். பலருக்கும் குலதெய்வமாக விளங்கும் இத்தல இறைவன் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார். கல்வெட்டுகளில் இத்தலம் 'முல்லைவனம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் பிறவியிலேயே கண் பார்வை திறனற்ற ஒருவர் இருந்தார். அவர் அவ்வூரில் உள்ள ஏகாம்பரநாதரிடம் அளவுகடந்த பக்தி கொண்டிருந்தார். அவர் தினமும் தனக்கு கண் பார்வை அருள வேண்டும் என்று ஏகாம்பரநாதரை வழிபட்டு வந்தார்.

ஒரு நாள் அவர் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட இறைவன், ஒரு கண்ணுக்கு மட்டும் பார்வை அளித்தார். மேலும் “கொங்கு நாட்டில் உள்ள கொடுவாய் எனும் இடத்தில் கோவர்த்தனாம்பிகை அன்னையுடன் நாகேஸ்வரர் எனும் திருநாமத்தில் எழுந்தருளியுள்ள என்னை வழிபட்டால் மற்றொரு கண் பார்வையும் கிடைக்கும்" என்றும் அருளினார். அதன்படி, இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு கண் பார்வை பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. எனவே இத் தலத்திற்கு வந்து வழிபட்டால் கண் சம்பந்தமான பிரச்சினை விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

கோவிலின் முன்புறத்தில் ஒரு விளக்குத் தூண் காணப்படுகிறது. விளக்குத் தூண் இருக்கும் பீடத்தில் விநாயகர், பால் சொரிந்து சிவனை வழிபடும் பசு, நின்ற கோலத்தில் நந்தி பகவான் ஆகியவை புடைப்பு சிற்பமாக உள்ளன.

கருவறையில் நாகேஸ்வரசுவாமி பக்தர்களுக்கு அருள்மழை பொழிகிறார். அவரின் இடதுபுறத்தில் நடராஜர் சன்னிதி காணப்படுகிறது. கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சுப்பிரமணியர் வள்ளி - தெய்வானையுடன் காட்சி தருகிறார். இங்கு துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும் என்பது தனிச் சிறப்பாகும்.

இக்கோவில் ராகு - கேது பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. பிரதோஷம், மகா சிவராத்திரி, ராகு - கேது பெயர்ச்சி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com