சோகம் தீர்க்கும் திங்கட்கிழமை சோமவார விரதம்

திங்கட்கிழமையை குறிக்கும் சொல்லுக்கு சோமவாரம் என்று பெயர். கார்த்திகை திங்கட்கிழமையான சோமவாரத்தில் சிவபெருமானை விரதமிருந்து வழிபடுவது சிறப்புக்குரியது.
சோகம் தீர்க்கும் திங்கட்கிழமை சோமவார விரதம்
Published on

சாபத்தின் காரணமாக நோயில் விழுந்த சந்திரன், தன் சாபமும், நோயும் நீங்க சிவபெருமானை நினைத்து தவம் இருந்தான். அதன் பயனாக அவன் நோய் நீங்கப்பெற்றான். மேலும் நவக்கிரகங்களில் ஒருவராகும் வாய்ப்பையும் பெற்றான். அவன் பெயரில் உருவானதே சோமவார விரதமாகும்.

இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், துன்பங் கள், பாவங்கள் விலகுவதுடன், நல்ல வாழ்க்கைத் துணையையும் பெறுவார்கள். இந்து சமய திருமணங்களில் அருந்ததி பார்ப்பது என்று ஒரு நிகழ்வு உண்டு. கற்புக்கரசியான அந்த அருந்ததி தேவியை வசிஷ்ட முனிவர் தன் வாழ்க்கைத் துணைவியாக பெற்றது, சோமவார விரதத்தின் வாயிலாகத்தான். எனவே பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து நல்ல வாழ்க்கைத் துணையை அடையலாம்.

சோமவார விரதங்களில், கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரங்கள் பிரசித்திப்பெற்றதாக விளங்குகிறது. கார்த்திகை மாத சோமவாரங்களில், அனைத்து சிவாலயங்களிலும், இறைவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்படும். கார்த்திகை மாதத் தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பதாக ஐதீகம்.

எனவே அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்யப்படுவதாக சொல்கிறார்கள்.

கார்த்திகை திங்கட்கிழமையான சோமவாரத்தில், கணவனும் மனைவியும் ஆலயங்களுக்குச் சென்று வருவது உத்தமம். அதனால் சிவ-சக்தியின் ஆசி கிடைத்து, காலம் முழுவதும் அந்தத் தம்பதியர் கருத்து வேறுபாடின்றி இணைந்திருப்பார்கள்.

இது தவிர கார்த்திகை மாதத்தில் செய்யப்படும் எந்த பூஜையாக இருந்தாலும், அது பன்மடங்கு பலன் அளிக்கக்கூடியதாகும். அந்த பூஜைகளால் பாவங்கள், வறுமை விலகி, வளமான வாழ்வு அமையும். கார்த்திகை மாதத்தில் ஸ்ரீமன் நாராயணர், ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் எழுந்தருள்வதாக ஐதீகம்.

கார்த்திகை மாதத்தில் கஸ்தூரி மஞ்சளால் அபிஷேகம் செய்து, தாமரை மலரால் அர்ச்சனை செய்தால், மகா விஷ்ணுவுடன் லட்சுமிதேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிடுவாள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com