பங்குனி உத்திரம் விரதம் இருக்கும் முறையும், பலனும்...

மாலை கோவிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும்.
பங்குனி உத்திரம் விரதம் இருக்கும் முறையும், பலனும்...
Published on

பங்குனி உத்திரம் நாளில் காலையில் எழுந்ததும், விரதத்தைக் கடைபிடிப்பவர்கள் காலையில் குளித்துவிட்டு திருமண கோலத்தில் சக்தியுடன் வீற்றிருக்கும் சிவபெருமானை தியானிக்க வேண்டும். புனித திரவியங்களால் பக்தியுடன் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். சிவன்- பார்வதிக்கு இனிமையான நைவேத்தியங்களைச் செய்து, அவர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும். அந்தணர்கள், வேதம் கற்றவர்கள், சிவபக்தர்கள் ஆகியோரை தம்பதி சமேதராக அழைத்து விருந்து அளிக்க வேண்டும்.

பின்னர் சிவன் கோவிலுக்குச் சென்று வணங்கி, மூன்று முறை வலம் வந்து, இறைவனை வணங்க வேண்டும். ஓம் சிவாயநம, ஓம் பராசக்திநம என்ற நாமத்தை 108 முறை ஜெபிக்கவேண்டும். மதியம் ஒருவேளை உணவு உண்ணலாம். இயலாதவர்கள் காலை, இரவு பால் பழம் சாப்பிடலாம். இவ்விரதத்தினை முருகப்பெருமானை வேண்டியும் மேற்கொள்ளலாம். மாலை கோவிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும்.

இந்த விரதத்தை உண்மையாகக் கடைப்பிடித்த மகாவிஷ்ணு லட்சுமியை திருமணம் செய்துகொண்டார். பிரம்மா, சரஸ்வதியையும், இந்திரன் இந்திராணியையும், சந்திரன் 27 நட்சத்திரங்களையும் மணந்தனர். அகத்தியமுனிவர் லோபாமுத்ராவை  இந்த விரதத்தைக் கடைப்பிடித்து அடைந்தார்.

விஷ்ணுவின் புதல்விகளான அம்ரிதவல்லி, சவுந்தர்யவல்லி என்ற  2 மகள்கள் தேவசேனா மற்றும் வள்ளி என்ற பெயரில் ஆறுமுகக் கடவுளை மணந்தனர். சுகேசி என்று அழைக்கப்படும் வேதாங்க ரிஷியின் மகள் நந்தி தேவரை மணந்தார். முனிவர் சத்யபூர்ணரின் 2 மகள்கள் பூர்ணா, புஷ்கலாவை சாஸ்தா திருமணம் செய்து கொண்டார். காமன் ரதியைப் பெற்றான், சீதைக்கு ராமர் கிடைத்தார். ஜம்பவதிக்கு கிருஷ்ணர் கிடைத்தார். பலர் இந்த விரதத்தின் மகிமையால் பலன் அடைந்தனர்.

இந்த விரதத்தைக் கடைபிடிக்கும் ஆண் தனக்குப் பிடித்த பெண்ணையும், பெண்ணுக்கு அழகான ஆண் கணவனும் கிடைப்பான். 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதமிருப்பவர்கள் பிறப்பற்ற முக்தி நிலை அடைவர் என்று விரதநூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com