

சிவபெருமானால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்ட சிறப்புக்குரியவர், காரைக்கால் அம்மையார். இவர் 63 நாயன்மார்களில் ஒருவராகவும் போற்றப்படுகிறார்.
காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி காரைக்கால் அம்மையார் கோவிலில் 'மாங்கனி திருவிழா' கொண்டாடப்படுகிறது.
காரைக்கால் பகுதியில் பெரும் வணிகராக இருந்த தனதத்தன் என்பவரின் மகள், புனிதவதி. இவர் சிறு வயதில் இருந்தே சிவபெருமான் மீது அளவுகடந்த பக்தி கொண்டிருந்தார். புனிதவதி திருமண வயதை எட்டியதும், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வணிகரான பரமதத்தர் என்பவருக்கு மணம் முடித்து கொடுத்தனர். திருமணத்துக்கு பிறகும் புனிதவதி சிவனடியார்களுக்கு தொண்டு செய்துவந்தார்.
ஒரு முறை பரமதத்தன், தனக்கு கிடைத்த இரண்டு மாங்கனிகளை வேலையாட்கள் மூலம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான். இந்நிலையில் புனிதவதியின் சிவ பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான், திருவிளையாடல் ஒன்றை நடத்தினார். சிவபெருமான், சிவனடியார் உருவத்தில் புனிதவதி வீட்டிற்கு யாசகம் கேட்டு வந்தார். அடியாரை வரவேற்ற புனிதவதி, அவருக்கு உணவு அளித்துவிட்டு, தன் கணவர் கொடுத்தனுப்பிய மாங்கனிகளில் ஒன்றையும் கொடுத்தார். மகிழ்வுடன் உணவருந்திய சிவனடியார், புனிதவதியை வாழ்த்திவிட்டு சென்றார்.
சிறிது நேரத்தில் பரமதத்தன் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தான். கணவருக்கு உணவு பரிமாறிய புனிதவதி, மீதமிருந்த ஒரு மாங்கனியை கொடுத்தார். மாங்கனியை உண்ட பரமதத்தன், அதன் சுவை அருமையாக இருக்கவே, மற்றொரு மாங்கனியையும் எடுத்து வரும்படி கூறினான். 'ஒரு மாங்கனியை சிவனடியாருக்கு கொடுத்தேன்' என்று சொன்னால், கணவர் கோபித்துக்கொள்வார் என்று நினைத்த புனிதவதி, பூஜையறைக்கு சென்று சிவபெருமானை நினைத்து வேண்டினார். அப்போது சிவன் அருளால், புனிதவதியின் கையில் ஒரு மாங்கனி வந்தது.
இதனால் மகிழ்ச்சியுடன் தன் கணவரிடம் அந்த மாங்கனியை கொடுத்தார். ஆனால் அதை சாப்பிட்ட பரமதத்தன், 'முதலில் சாப்பிட்ட கனியை விட இது அதிக சுவையுடன் உள்ளதே' என்று புனிதவதியிடம் கேட்டான். புனிதவதி நடந்தவற்றை கூறினார். ஆனால் அதை நம்ப மறுத்த பரமதத்தன், “உனக்கு சிவபெருமானே மாங்கனி தந்தது உண்மை என்றால், மீண்டும் ஒரு மாங்கனியை வரவழைத்து காட்டு” என்றான். புனிதவதி சிவபெருமானை வேண்ட, உடனே அவரது கையில் இன்னொரு மாங்கனி கிடைத்தது.
இதைக் கண்டு வியந்த பரமதத்தன், 'நீ தெய்வப் பெண். உன்னுடன் சேர்ந்து வாழ்வது சரியல்ல' என்று கூறி, புனிதவதியை விட்டு பிரிந்து பாண்டிய நாடு சென்றான். சிறிது காலத்துக்கு பிறகு அங்கேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தான். அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு தனது முதல் மனைவியான புனிதவதியின் பெயரைச் சூட்டினான்.
இத்தகவலை அறிந்த புனிதவதி, தன் கணவனுக்கு தேவையற்ற இந்த இளமையும், அழகும் எனக்கு வேண்டாம் என கருதி, சிவபெருமானிடம் பேய் வடிவினை வரமாக கேட்டுப் பெற்றார். பிறகு, பேய் உருவத்துடன் சிவபெருமானை காண, கயிலாய மலையை நோக்கி பயணித்தார். கயிலாயம் புனிதமான இடம் என்பதால் காலால் நடப்பது குற்றம் என்று எண்ணிய புனிதவதி, தனது தலையால் நடந்து சென்றார்.
இதைப் பார்த்த சிவபெருமான், புனிதவதியை 'அம்மையே' என்று அழைத்தார். மேலும் 'உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று கேட்க, அதற்கு புனிதவதி “இறைவா.. பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்பிருந்தால் உன்னை என்றும் மறவாமை வேண்டும், நீ எப்போது ஆடும்போதும் உன் காலடியின் கீழ் நான் இருக்க வேண்டும்" என்று வரம் கேட்டார். சிவபெருமானும் அவ்வாறே அருளி, தனது திருத்தாண்டவத்தை காட்டினார்.
சிவபெருமானே 'அம்மையே' என்று அழைத்ததாலும், புனிதவதி காரைக்காலில் பிறந்ததாலும் 'காரைக்கால் அம்மையார்' என்று பெயர் பெற்றார். காரைக்காலில், இவருக்கு தனி கோவில் உள்ளது. அங்கு காரைக்கால் அம்மையாரே மூலவராக உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பவுர்ணமி தினத்தை ஒட்டி, சிவபெருமான் அடியாராக வந்து புனிதவதியிடம் மாங்கனி சாப்பிட்டதையும், சிவபெருமான் புனிதவதிக்கு மாங்கனி அருளியதையும் நினைவுகூரும் வகையில் இக்கோவிலில் 'மாங்கனி திருவிழா' கொண்டாடப்படுகிறது.
பவுர்ணமி தினத்தன்று, சிவபெருமான் பிச்சாடனர் கோலத்தில் வீதி உலா வருவார். அப்போது மக்கள் அனைவரும் உயரமான இடத்தில் இருந்து மாங்கனிகளை பிச்சாடனர் மீது வீசுவர். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், இந்த மாங்கனிகளை தங்கள் முந்தானையில் பிடித்து, அதை சாப்பிட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. மாங்கனி திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மாங்கனிகளை காரைக்கால் அம்மையாருக்கு படைத்து வழிபடுவார்கள்.