தம்பதி ஒற்றுமை காக்கும் லட்சுமி நரசிம்மர்

'நரன்' என்றால் 'மனிதன்' என்றும், 'சிம்மம்' என்றால் 'சிங்கம்' என்றும் பொருள்.
தம்பதி ஒற்றுமை காக்கும் லட்சுமி நரசிம்மர்
Published on

'நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை என்பது பக்தி பழமொழி. அதற்கேற்ப, வணங்கிய உடனே பலன் அளிக்கும் நரசிம்மர் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. எதிர்ப்புகளை நீக்கி, துன்பங்களில் இருந்து காக்கும் நரசிம்மருக்கு பல்வேறு சிறப்பு திருத்தலங்கள் உள்ளன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ளது, கனகவல்லி தாயார் உடனுறை லட்சுமி நரசிங்கப் பெருமாள் திருக்கோவில்.

தல வரலாறு

அசுரன் இரணியனின் மகனான பிரகலாதன், அசுரர் குலத்தில் பிறந்திருந்தாலும் நாராயணன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான். இரணியனைனே கடவுளாக வணங்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மகனே உத்தரவை மீறியதால் இரணியன் மிகுந்த கோபம் கொண்டான். நாராயணன் மீது பக்தி கொண்டதால், பெற்ற பிள்ளையையே கொடுமைப்படுத்தியதால் திருமால் நரசிம்மர் அவதாரம் எடுத்து இரணியனை அழித்தார்.

'நரன்' என்றால் 'மனிதன்' என்றும், 'சிம்மம்' என்றால் 'சிங்கம்' என்றும் பொருள். மனித உடலும், சிங்கத் தலையும் கொண்ட நரசிம்மர் அவதாரத்தை கண்டு உலகமே நடுநடுங்கியது. இதை அறிந்த மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமியிடம் நரசிம்மரின் கோபத்தை தணித்து அருள்பாலிக்கும்படி வேண்டினார். அதன்படியே பெருமாளின் கோபம் தணியும்படி தாயாரும் ஆசுவாசப்படுத்தினார். இதன் அடிப்படையிலேயே லட்சுமி மடியில் இருக்கும் நரசிம்மர் வழிபாடு உருவானது.

இந்த தலத்தில், 'நரசிம்மர் கோபம் தணிந்து மக்களுக்கு அருள்புரிய வேண்டும்' என மகாலட்சுமி வேண்டிய நிலையில் காட்சி தருகிறார். இத்தகைய நரசிம்மரின் கோலத்தை காண்பது அரிது. இக்கோவிலில் லட்சுமிக்கு முக்கியத்துவம் என்பதால் 'நரசிம்ம லட்சுமி' என பெயர் பெற்று அருள்பாலிக்கிறார்.

கோவில் அமைப்பு

ஊரின் மையப்பகுதியில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக கோவில் காட்சி தருகிறது. தரைத்தளத்தில் இருந்து மூன்று அடி படிக்கட்டுகள் வழியாக கீழிறங்கி செல்லும்படி கோவில் அமைந்துள்ளது. கொடிமரத்தை வணங்கிவிட்டு சிறிது தூரம் சென்றால் நரசிம்மரை வணங்கியபடி கருடாழ்வார் காட்சி தருகிறார்.

கோவில் மகாமண்டபத்தில் நுழைந்தால் தூண்களில் தத்ரூபமாக அமைந்த தசாவதாரக் காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கிறது. அங்கே 63 நாயன்மார்கள், விஷ்ணு துர்க்கை, வேணுகோபாலன், கோதண்டராமர், சக்கரத்தாழ்வார், லட்சுமி ஹயக்ரீவர் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் உள்ளனர். அர்த்தமண்டபத்தில் உற்சவரான வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவர்களுக்கு அருகில் அனுமன் அருள்பாலிக்கிறார்.

கருவறையில் மூலவர் லட்சுமி நரசிம்மர், தனது இடது தொடையில் மகாலட்சுமி தாயாரை அமர வைத்து அமர்ந்த கோலத்தில் அற்புதமாக அருள்பாலிக்கிறார். தாயாரும் கைகளை கூப்பிய வண்ணம் நரசிம்மரை நோக்கி வணங்கியபடி, பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்ற நிலையில் காட்சி தருகிறார். இத்தகைய அரிய காட்சியே இத்தலத்தின் சிறப்பாக உள்ளது. பிரகாரத்தில் தாயார் கனகவல்லி, ஆண்டாள் நாச்சியார், நான்கு கரங்களுடன் கூடிய அனுமன் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

பிரார்த்தனை

திருமணத்தடை நீங்கவும், செவ்வாய் தோஷம் விலகவும், திருவாதிரை, சதயம் நட்சத்திரக்காரர்களும், ஏழரைச் சனி தோஷம் இருப்பவர்களும், ராகு திசை நடப்பவர்களும், கடன் தொல்லையில் இருந்து விடுபடவும், வழக்குகளில் வெற்றி பெறவும், தம்பதியர் ஒற்றுமைக்கும் லட்சுமி நரசிம்மரை வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் திருமஞ்சனம் செய்தும், விரலி மஞ்சளால் மாலை கட்டியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

அமைவிடம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தின் மையப்பகுதியில், பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com