

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது, பழைமை வாய்ந்த அம்பாபாய் திருக்கோவில். இந்தியாவில் மிகவும் சிறப்புமிக்கதாக போற்றப்படும் சக்தி பீடங்களில் ஒன்றாக இக்கோவில் கருதப்படுகிறது. இது, லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமாகும்.
முற்காலத்தில் இத்தலம் 'கரவீரபுரம்' என்று அழைக்கப்பட்டது. ஒரு சமயம் இங்குள்ள மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த கோலாசுரன் என்ற அசுரனை மகாலட்சுமி அழித்து மக்களை காத்தார். இறக்கும் தருவாயில் அந்த அசுரன், இத்தலம் தன் பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்று வேண்டினான். அதன்படியே இத்தலம், 'கோலாப்பூர்' என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த ஆலயம் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. கருவறையில் ஒரு பீடத்தின் மீது சுமார் 3 அடி உயரத்தில் மகாலட்சுமி தாயார் அருள்பாலிக்கிறார். இவர் நான்கு திருக்கரங்களுடன் மகுடம் தரித்து நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மகாலட்சுமியின் சிலை சுமார் 40 கிலோ எடை கொண்டது. கிரீடத்தில் ஐந்து தலை பாம்பு உள்ளது.
பொதுவாக கோவில்களில் மூலவர் சிலையானது, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி காணப்படும். ஆனால் இங்கு மகாலட்சுமி தாயார் மேற்கு நோக்கி காட்சி தருவது தனிச் சிறப்பாகும். ஜனவரி மாதத்தில் இரண்டு நாட்கள் மகாலட்சுமியின் பாதத்திலும், பிப்ரவரி மற்றும் நவம்பர் மாதத்தில் இரண்டு நாட்கள் மகாலட்சுமியின் மார்பிலும், பிப்ரவரி மற்றும் நவம்பர் மாதத்தில் இரண்டு நாட்கள் மகாலட்சுமியின் உடல் முழுவதும் சூரியக் கதிர்கள் விழுவது அதிசயமாக பார்க்கப்படுகிறது. சூரியக் கதிர்கள் விழும்போது மகாலட்சுமி அம்மனை வழிபடுவது சிறப்பாகும்.