

'மூர்த்தி சிறியது கீர்த்தி பெரியது' என்பார்கள். அதுபோல ஒரு சிறிய கோவிலாக காணப்பட்டாலும் அளவற்ற சக்திமிக்க தெய்வமாக அருள்பாலிக்கிறார், தென்பழனி கல்யாண சிவசுப்பிரமணியர். இத்தகைய சிறப்பான கோவில், பூவிருந்தவல்லிக்கும் ஆவடிக்கும் இடையில் உள்ள சென்னீர்குப்பம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இக்கோவி லின் நுழைவு முகப்பில் வள்ளி - தேவசேனா சமேத சுப்பிரமணியர் வீற்றிருக்க, இருபுறங்களிலும் இரண்டு மயில்கள் காட்சி தருகின்றன. கோவிலுக்குள் வேல், பலிபீடம், முருகப்பெருமானின் வாகனமான மயில் ஆகியவை அமைந்துள்ளன. கருவறையின் வெளிப் புறத்தில் துவாரபாலகர்கள் காட்சி தருகிறார்கள்.
கருவறையில் மூலவர் ஸ்ரீகல்யாண சிவசுப்பிர மணியர் என்ற திருநாமத்துடன், வள்ளி - தேவசேனா சமேதராக கொடியையும் வேலையும் ஏந்தியவாறு, கிழக்கு திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். கருவறைக்குள் உற்சவ மூர்த்தி யாகவும் வள்ளி - தேவசேனா சமேத ஸ்ரீகல்யாண சிவ சுப்பிரமணியர் காட்சி தருகிறார்.
கருவறைக் கோட்டங்களில் தெற்கு நோக்கிய தட்சிணாமூர்த்தி, மேற்கு நோக்கிய மகாவிஷ்ணு மற்றும் வடக்கு நோக்கிய துர்க்கை அம்மன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். கோவிலின் உள்திருச்சுற்றில் வடக்குதிசை நோக்கி அமைந்துள்ள ஒரு சிறிய சன்னிதியில் சங்கிலி கருப்பசாமி கையில் அரிவாளை ஏந்தியபடி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். அருகில் சப்த கன்னியர்கள் மற்றும் நாகர் சன்னிதிகள் அருகருகே அமைந்துள்ளன.
கிழக்கு திசை நோக்கி செல்வகணபதி, மகாலட்சுமி, பக்த ஆஞ்சநேயர் சன்னிதிகள் அமைந்துள்ளன. அருகில் கிழக்கு நோக்கிய சன்னிதியில் அருள்தரும் ஐயப்பன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். தொடர்ந்து காசி விஸ்வநாதர் சன்னிதியும், அருகில் காசி விசாலாட்சி சன்னிதியும் அமைந்துள்ளன. காசி விசாலாட்சி சன்னிதிக்குப் பின்பகுதியில் உள்ள சுவரில் சண்டிகேஸ்வரர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தெற்கு திசை நோக்கி கால பைரவர் சன்னிதியும், நவக்கிரக சன்னிதியும் அமைந்துள்ளன.
நவக்கிரக சன்னிதியில் உள்ள சனீஸ்வரர், காசி விஸ்வநாதரை நோக்கியவாறு அமைந்துள்ளதால், சனீஸ்வரரின் பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் அதிலிருந்து நிவர்த்தி பெற இத்தலத்திற்கு வருகிறார்கள். இதன் காரணமாக இத்தலமானது சனி தோஷ நிவர்த்தி தலமாகவும் கருதப்படுகிறது. மேலும் இத்தலத்து முருகப்பெருமான் தன்னை நம்பிக்கையோடு வணங்கும் பக்தர்களின் திருமணத் தடைகளை நீக்கி திருமணம் சிறப்பாக நடந்தேற அருள்கிறார்.
விநாயகர் சதுர்த்தி, அமாவாசை, சங்கடஹர சதுர்த்தி, பவுர்ணமி, சஷ்டி, கிருத்திகை, பங்குனி உத் திரம், பிரதோஷம், விசாகம், தேய்பிறை அஷ்டமி மற்றும் மகாசிவராத்திரி முதலான உற்சவங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.
காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இத்தல மானது பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும்.
பூவிருந்தவல்லிக்கு அருகில் கரையான்சாவடி -ஆவடி சாலையில் உள்ள சென்னீர்குப்பத்தில் செல்வ கணபதி நகரில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னீர் குப்பத்தில் வெத்தலைத்தோட்டம் என்ற நிறுத்தத்தில் இறங்கி ஒரு கிலோமீட்டர் தூரம் மேற்கு திசை நோக்கி நடந்தால் இத்தலத்தை அடையலாம். பூவிருந்தவல்லி யில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிலும், ஆவடியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் இக் கோவில் அமைந்துள்ளது.