

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், காளிப்பட்டி கிராமத்தில் அருள்மிகு கந்தசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். விஷக்கடியை நிவர்த்தி செய்யும் தலமாக உள்ளது. முருகன் இங்கு கந்தசாமி என்ற பெயரொடு அருள்பாலிக்கிறார்.
பழனிக்கு சென்று பழனியாண்டவனை தரிசிப்பது பக்தர்களின் வாழ்வில் ஒரு பொற்கால அனுபவமாகக் கருதப்படுகிறது. ஆனால் அந்தப் பழனியில் வீற்றிருக்கும் கந்தனை காளிப்பட்டிக்கு வரவழைத்த பெருமை லட்சுமணன் என்ற பக்தருக்கே உரியது.
தன் சிறிய குடிசையில் காவடியை நிறுவி தினமும் பூஜை செய்து வந்த அவர், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருநாளில் பாதயாத்திரையாக காவடி சுமந்து பழனிக்கு சென்று முருகனை வணங்குவது வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒருமுறை அவருக்கு கடுமையான காய்ச்சல் பாதிக்கப்பட்டது. உடல்நிலை சரியில்லாத போதும், முருகனுக்காக விரதம் இருந்து பாதையாத்திரை மேற்கொண்டார். முருகனை வணங்கிவிட்டு திரும்பும் வழியில், சோர்வை போக்க ஓரிடத்தில் ஓய்வெடுத்து படுத்து உறங்கினார். அப்போது கந்தன் கனவில் தோன்றி, இனிமேல் இவ்வளவு சிரமப்பட்டு இங்கு வர வேண்டாம். நானே நீ இருக்கும் காளிப்பட்டிக்கு வந்து தரிசனமளிப்பேன் என்று அருள் வழங்கினார்.இதனால் லட்சுமணன் மகிழ்ச்சியும் ஆச்சர்யமும் கொண்டார்.
பின்னர் காலப்போக்கில், லட்சுமணர் தமது இல்லத்திற்கு வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறத் தொடங்கினார். அவர் கூறிய ஒவ்வொரு வாக்கும் உண்மையாக நிறைவேறியது. அவரிடம் வாக்கு கேட்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
இந்நிலையில், ஒருநாள் கோவிலுக்கு அருகிலுள்ள ஒரு முதிய பெண்மணியின் தோட்டத்தில், ஒரு பசு கன்றை ஈன்றும் பால் வராமல் வறண்டு இருந்தது. இதை அந்த முதியவர் லட்சுமணரிடம் முறையிட்டார்.
பின்னர் லட்சுமணர் பசுவின் மடியில் விபூதி தடவி பால் கறக்க முயன்றார். அப்போது அதிசயமாக, அவர் கறந்தபோது குடம் குடமாக பால் பெருகி வந்தது. இதைக் கண்டிருந்த பக்தர்கள் ‘காளிப்பட்டி கந்தனுக்கு அரோகரா’ என்று பக்தி முழக்கமிட்டனர்.
அந்தப் பால் முழுவதையும் கந்தனுக்கு அபிஷேகமாக அர்ப்பணித்தனர். அந்நாள்முதல் இக்கோவிலில் பால் அபிஷேகம் செய்வது ஒரு சிறப்பாக போற்றப்படுகிறது.
முதலில் தன் காவடியை வைத்து பூஜை செய்த பூசாரி லட்சுமணரின் குடிசை இன்று இடும்பன் சன்னதியாக மாற்றப்பட்டுள்ளது. அந்தக் காவடிக்கு தினமும் இருவேளை பூஜை நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் மட்டும், இக்காவடியை இரண்டு கல் தூரத்தில் உள்ள திருமணிமுத்தாற்றுக்கு மேளதாள ஒலியுடன் எடுத்துச் செல்கிறார்கள். பின்னர் அங்கிருந்து கலசத்தில் தீர்த்தம் எடுத்து வந்து மூலவருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
மூலஸ்தானத்திற்கு நேருக்கு நேர் லட்சுமணரின் சமாதி அமைந்துள்ளது. அவரின் வாரிசுகள் இன்றளவும் கோவிலின் நிர்வாகப் பொறுப்பை மேற்கொண்டு வருகின்றனர். 20.12.1973 முதல் இத்திருக்கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது.
இத்திருக்கோவில் தைப்பூசத் திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெறும். விநாயகர், முருகன் இருவரும் தனித்தனி தேரில் எழுந்தருள்வர். ஒருவாரத்திற்கு மேலாக நடைபெறும் இந்த பெரியதேர்திருவிழாவில் சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, கரூர், தர்மபுரி போன்ற சுற்றியுள்ள அன்னைத்து இடங்களிலும் உள்ள பக்தர்கள் லகக்கணக்கில் பங்கேற்பார்கள்.
திருவிழாவின் போது இக்கோவிலில் ஒரு பெரிய கால்நடைச் சந்தை நடைபெறுகிறது. இது நாட்டின் முக்கியமான கால்நடைச் சந்தைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பாம்புக் கடியால் விஷம் பட்டவர்கள் விஷம் நீங்க இக்கோவிலுக்கு வருவர். இக்கோவிலில் மற்ற கோவிலை போல விபூதி பிரசாதம் வழங்கப்டுவதில்லை. மாறாக சுற்றுப்புறத்தில் இருந்து மண் எடுக்கப்பட்டு, அங்கே விளையக்கூடிய கரும்புகளில் இருந்து எடுக்கப்பட்ட சக்கைகள் மற்றும் பாம்புகளிடம் இருந்து எடுக்கப்படும் ஒருவைகயான திரவியம் போன்றவற்றால் தாயாரிக்கப்பட்ட மண்விபூதியே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
மேலும் இவை உடல் சம்பந்தமான நோய் மற்றும் விசக்கடிக்கு மருந்தாக விளங்குவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகுவதை இன்றளவும் கண்கூடாக பார்க்கமுடிகிறது.
இத்திருக்கோவில் சேலம்–திருச்செங்கோடு பிரதானச் சாலையில், சேலத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காளிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது.
இக்கோவில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.