குரு பார்க்க கோடி நன்மை... மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்

குருபகவான் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
குரு பார்க்க கோடி நன்மை... மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்
Published on

குரு பார்க்க கோடி நன்மை என்று நம் முன்னோர்கள் சொல்வது உண்டு. அந்த வகையில் ஒவ்வொருவரின் ராசிக்கு குரு பகவான் இடம் மாறும்போது அவர்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும். மேலும் ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்ந்து பல்வேறு நன்மைகளை கொடுப்பார்.

குரு பெயர்ச்சி விழாவையொட்டி மிதுனம் ராசியில் இருந்து கடக ராசிக்கு குருபகவான் இன்று காலை 11 மணிக்கு இடம் பெயர்ந்தார். இதையொட்டி பல்வேறு இடங்களில் உள்ள குருபகவான் கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

குருபெயர்ச்சியை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற தட்சணாமூர்த்தி கோவில் உள்ளது. கிழக்கு நோக்கு அமைந்துள்ள இக்கோவிலில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பஸ், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

மேலும் இக்கோவிலில் ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு குருபெயர்ச்சி விழா நேற்று முன்தினம் கோவிலில் சிறப்பு ஹோமத்துடன் தொடங்கியது. இன்று காலை 11 மணி முதல் சுமார் 3 நிமிடத்தில் குருபகவான் மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு இடம்பெயர்ந்தபோது மூலஸ்தானத்தில் உள்ள சுவாமிக்கும், கோபுரத்திற்கும் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் இன்று தங்க கவசத்தில் குருபகவான் காட்சியளித்தார். தொடர்ந்து மூலஸ்தானம் எதிரே 6 கார்த்திகை பெண்களுடன் குருபகவான் காட்சியளித்தார்.

விழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. குரு பெயர்ச்சி வழிபாட்டில் கலந்து கொண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com