கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை

இயேசு உயிர்தெழுதல் நிகழ்வு மெழுகுவர்த்திகள் ஏற்றியதன் மூலம் பிரார்த்தனைகளும், திருப்பலிகளும் நடைபெற்றது.
கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை
Published on

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த 3-வது நாளை உயிர்ப்பு பெருவிழா மற்றும் ஈஸ்டர் பண்டிகையாகக் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இன்று ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்க ளால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி கத்தோலிக்க திருச்சபைகளில் இரவு 11.30 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.30 மணி வரை திருப்பலி நடைபெற்றது.

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள், ஜெபங்கள் நடைபெற்றன.

பின்னர், இயேசு உயிர்தெழுந்த நிகழ்வு தேவால யத்தில் அரங்கேற்றப்பட்டது. அந்த நிகழ்வை வாண வேடிக்கைகளுடன் கிறிஸ்தவர்கள் வரவேற்றனர்.

பின்னர், திருப்பலியில் பூஜிக்கப்பட்ட தீர்த்தத்தை பாதிரியார்கள், கிறிஸ்தவர்கள் மீது தெளித்து அருளாசி வழங்கினர். ஈஸ்டர் சிறப்பு திருப்பலியில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஏராளமானோர் புத்தாடை அணிந்து வந்து தேவாலயங்களில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

இயேசு உயிர்தெழுதல் நிகழ்வு மெழுகுவர்த்திகள் ஏற்றியதன் மூலம் பிரார்த்தனைகளும், திருப்பலிகளும் நடைபெற்றது. பின்னர் ஒருவருக்கு ஒருவர் ஈஸ்டர் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டனர்.

இதேபோல், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி தேவாலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் ஆலயம், மயிலாப்பூரில் உள்ள லஸ் தேவாலயம், பரங்கிமலையில் உள்ள புனித தோமையார் மலை தேவாலயம்,

சின்னமலை ஆரோக்கிய அன்னை திருத்தலம், சூளைமேடு விண்ணேற்ற ஆண்டவர் ஆலயம் என சென்னை மற்றும் புறநகர் உட்படத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகையை யொட்டி சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இதே போல தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) ஆலயங்களில் அதிகாலை 4.30 மணி முதல் 7 மணி வரை சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கதீட்ரல் பேராலயம், புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆலயம், சூளை தூய பவுல் ஆலயம், பிராட்வே தக்கர் ஆலயம், தமிழ் வெஸ்லி ஆலயம் மற்றும் பெந்தே கொஸ்து, மெத்தடிஸ்ட், லூத்தரன் திருச்சபையில் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கதீட்ரல் ஆலயத்தில் சென்னை பேராயர் பால் பிரான்சிஸ் ரவிச்சந்திரன் ஈஸ்டர் சிறப்பு செய்தியை வழங்கினார். சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையை உற்சாகத்துடன கொண்டாடினர். ஒருவருக்கொருவர் இயேசு உயிர்த்தெழுந்த திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஆலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com