

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று காலை முதல் பக்தர்களின் கூட்டம் படிப்படியாக அதிகரித்து வந்தது. கோடை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்கு வர தொடங்கினர்.
வாக்கு பதிவு முடிவடைந்ததால் தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து உள்ளது. இதனால் வைகுந்தம் தங்கும் அறைகள், நாராயணகிரி கொட்டகைகள் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். படகங்கம்மா கோவில் வரை பக்தர்கள் தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
கோடைக்காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்கு வருவதால் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ள அறங்காவலர் குழு கூட்டத்தில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் நேரம் ஒதுக்கீட்டு தரிசனங்களை ரத்து செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 71,008 பேர் தரிசனம் செய்தனர். 36,144 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.52 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.