சிற்பங்கள் நிறைந்த சங்கு நாராயணர் கோவில்

கோவில் பிரகாரத்தில் கிருஷ்ணர், சின்னமஸ்தா, சிவன் ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன.
Changu narayan temple
Published on

நேபாள நாட்டின் பக்தபூர் மாவட்டம் தவளகிரி மலைப்பகுதியில் சங்கு என்ற கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இது, மகாவிஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலமாகும்.

திருமாலின் கையில் இருக்கும் சங்கின் பெயரில் அமைந்த கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆலயம் என்பதால் இக்கோவில் 'சங்கு நாராயணர் கோவில்' என்று அழைக்கப்படுகிறது.

நேபாளத்தின் கலாச்சாரம் மற்றும் பண்டைய கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இக்கோவில் விளங்குகிறது. காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள வரலாற்று சின்னங்களுடன் சேர்த்து இக்கோவில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தலமாகவும் திகழ்கிறது. கோவில் அருகே மனோகரா நதி பாய்கிறது.

4-ம் நூற்றாண்டில் லிச்சாவி அரசர்களின் ஆட்சி காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. நேபாளத்தின் பாரம்பரிய 'பகோடா' கட்டிட கலை பாணியில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மர மற்றும் கல் சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் புகழ்பெற்றவை ஆகும்.

கோவில் பிரகாரத்தில் கிருஷ்ணர், சின்னமஸ்தா, சிவன் ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன. சன்னிதி வாசல்களில் சிங்கம், யானை, யாழி, சர்பங்கள் போன்றவற்றின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. திருமாலின் பத்து அவதார சிற்பங்கள், கோவிலின் மேற்கூரையை தாங்கியபடி உள்ளன. இங்குள்ள கருட பகவானின் சிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

மேலும், 7-ம் நூற்றாண்டை சேர்ந்த கருட வாகனத்தில் இருக்கும் திருமால் சிற்பமும் அழகுற அமைந்துள்ளது. இவர் 'கருட நாராயணர்' என்று அழைக்கப்படுகிறார். மேலும், வைகுண்ட விஷ்ணு, ஸ்ரீதர் விஷ்ணு போன்ற வடிவங்களிலும் சிற்பங்கள் உள்ளன. இக்கோவிலை சுற்றிலும் செண்பக மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

காத்மாண்டுவில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவிலும், பக்தபூர் நகரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com