

சைவ பெருமக்களால் பாடப்பெற்ற பல்வேறு திருத்தலங்களை தன்னகத்தே கொண்ட சோழ நாட்டின் மணி மகுடமாக தஞ்சை பெரியகோவில் விளங்கி வருகிறது. மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும், கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.
கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். பெரியகோவிலில் கடைசியாக கடந்த 1996-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. 23 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த ஆண்டு(2020) பிப்ரவரி மாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 1 ஆண்டுக்கு மேலாக இந்திய தொல்லியல்துறையின் சார்பில் திருப்பணிகள் நடந்து வருகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தஞ்சை பெரியகோவிலில் வருகிற 2-ந் தேதி(திங்கட்கிழமை) பாலாலயம் நடக்கிறது. இதற்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த வாரம் கோவில் வளாகத்தில் நடந்தது. இந்த நிலையில் பாலாலய பூஜை நேற்ற ுகாலை 8.30 மணிக்கு தொடங்கியது. முதலில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை நடந்தது. தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லட்சுமி பூஜை முடிந்தவுடன் தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் மேளதாளம் முழங்க கும்பத்தில் இருந்த புனித நீர் எடுத்து செல்லப்பட்டு, பெருவுடையார் சன்னதி இடது புறத்தில் உள்ள இரட்டை விநாயகருக்கு கும்ப நீரை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணன், நிர்வாக அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் ரெங்கராஜ் மற்றும் பல்வேறு ஊரில் இருந்து வந்த சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் கலந்து கொண்டனர். மாலையில் வாஸ்து சாந்தி, பிரவேச பலி நடந்தது.
இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி மூலமந்திர ஹோமத்துடன் கோவிலில் உள்ள அனைத்து சாமிகளுக்கும் ருத்ரா அபிஷேகம் நடக்கிறது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு கும்பாலங்காரம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து கடம ்புறப்பாடு நடந்து யாகசாலையை பிரவேசம் செய்கிறது. அங்கு முதல்கால யாகசாலை பூஜை தொடங்குகிறது.
நாளை(1-ந் தேதி) காலை 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது. 2-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் காலை 7 மணிக்குள் 4-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 7 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடும், 9 மணிக்கு மேல் பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனித நீராட்டு வைபவமும், தீபாராதனையும் நடக்கிறது. அதன்பிறகு கோவில்களில் உள்ள அனைத்து மூலவர் சன்னதிகளும் திரையிட்டு மூடப்படுகிறது.
அதற்கு பதிலாக பெருவுடையார், பெரியநாயகி அம்மன் உலோக சிலைகளுக்கு பாலாலய பூஜையில் ஆவாஹணம் செய்யப்படும். இதைத்தொடர்ந்து பெருவுடையார் சன்னதி முன் உள்ள மண்டபத்தில் இந்த சிலைகள் வைக்கப்படும். கும்பாபிஷேகம் முடியும் வரை இந்த சிலைகளுக்கு நாள்தோறும் பூஜைகள் செய்யப்படும்.
இதேபோல் விநாயகர், சுப்பிரமணியசாமி உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் பெருவுடையார் சன்னதி முன் உள்ள மண்டபத்தில் அத்திபலகையில் உருவங்கள் வரையப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கும் பாலாலய பூஜையில் ஆவாஹணம் செய்யப்படும். இந்த படங்களுக்கும் கும்பாபிஷேகம் வரை பூஜை செய்யப்படும். பக்தர்கள் இந்த மண்டபத்தில் உள்ள சிலைகள், சாமி உருவங்களை வழிபாடு செய்யலாம்.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, அனைத்து சன்னதிகளில் உள்ள கருவறை பீடம், தரைத்தளம் உள்ளிட்டவற்றில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் அனைத்து சன்னதிகளிலும் கும்பாபிஷேகம் நடைபெறும் வரை பூஜைகள் நடைபெறாது.
பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 8 கால யாகசாலை பூஜை நடைபெற உள்ளது. பிப்ரவரி 1-ந் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜை தொடங்கும். அதற்கு முன்பாக விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம் நடைபெறும். பிப்ரவரி 5-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை கும்பாபிஷேகம் நடக்கிறது என்றனர்.