திருதியை திதியில் அட்சய பாத்திரம் பெற்ற பாண்டவர்கள்

நம்முடன் வந்தவர்களுக்கு உணவு அளிப்பது நம்முடைய கடமை என்று எண்ணிய தர்மர், அனைவருக்கும் உணவளிக்க முடியாமல் வருத்தப்பட்டார்.
திருதியை திதியில் அட்சய பாத்திரம் பெற்ற பாண்டவர்கள்
Published on

சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை நாள் 'அட்சய திருதியை' என்று கொண்டாடப்படுகிறது. 'அட்சயம்' என்றால் 'குறையாதது' என்று பொருள்.

அதாவது அட்சய திருதியை நாளில் செய்யும் நற்காரியங்கள், தர்மங்களுக்கு பல மடங்கு நன்மைகள் வந்துசேரும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது சிறப்பானதாக கருதப்படுகிறது.

அட்சய திருதியை நாளில் பல புராண நிகழ்வுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதில் சிலவற்றை காண்போம்.

அட்சய பாத்திரம் பெற்ற பாண்டவர்கள்

மகாபாரதத்தில் சகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள். வனவாசம் செல்ல நேர்ந்தது. அப்போது, பாண்டவர்கள் மீது அன்பு கொண்ட மக்களும், அந்தணர்களும், முனிவர்களும் பாண்டவர்களை பின்தொடர்ந்து சென்றனர். இதைப் பார்த்த தர்மர், "தாங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அன்புக்கு கட்டுப்படுகிறேன். இருப்பினும் நீங்கள் எங்களை பின்தொடர வேண்டாம். திரும்பி சென்று விடுங்கள்" என்று கூறி புறப்பட்டார்.

எனினும் சில அந்தணர்களும், முனிவர்களும் பாண்டவர்களை பின்தொடர்ந்து சென்றனர். பாண்டவர்கள் அன்றிரவு கங்கை நதிக் கரையில் தங்கினர்.

இந்த நிலையில், 'நம்முடன் வந்தவர்களுக்கு உணவு அளிப்பது நம்முடைய கடமை என்று எண்ணிய தர்மர், அனைவருக்கும் உணவளிக்க முடியாமல் வருத்தப்பட்டார். அதே வேளையில் துர்வாச முனிவரும் பாண்டவர்களின் விருந்தோம்பலை சோதிக்க வந்திருந்தார். இதையடுத்து தர்மர், சூரிய பகவானை நோக்கி கடும் தவம் இயற்றினார்.

தவத்தில் மகிழ்ந்த சூரிய பகவான், "திரவுபதி உண்ணாமல் பரிமாறிக்கொண்டிருக்கும் வரை, இந்த பாத்திரத்தில் இடும் உணவுப் பொருட்களோ அல்லது தயார் செய்யும் உணவுப் பொருட்களோ குறையாமல் தோன்றிக் கொண்டே இருக்கும்" என அருளி அட்சய பாத்திரத்தை அளித்தார். இதனால் மகிழ்ந்த தர்மர், அட்சய பாத்திரத்தின் மகிமையால் அனைவருக்கும் உணவு அளித்து பசியை போக்கினார்.

இவ்வாறு சூரிய பகவானிடம் இருந்து தர்மர் அட்சய பாத்திரத்தை பெற்றது. சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை திதி அன்றுதான். எனவேதான் இந்த தினத்தை அட்சய திருதியை' என்று அழைக்கிறோம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com