

கிருஷ்ண பகவான் பல லீலைகளை நிகழ்த்தி உள்ளார். அதில் ஒன்று தான் குசேலரை நொடிப் பொழுதில் செல்வந்தராக மாற்றியது. கிருஷ்ணர் மன்னராக இருந்தபோது, அவரின் சிறுவயது நண்பரான குசேலர், கிருஷ்ணரை பார்க்க வந்தார். குசேலர் மிகவும் வறுமையில் வாடினார். அதனால் கிருஷ்ணரிடம் ஏதேனும் உதவி கேட்கலாம் என்று நினைத்தார். வறுமையில் வாடினாலும் கிருஷ்ணரை காண வந்த குசேலர், வெறுங்கையுடன் வராமல் ஒரு பிடி அவலை துணியில் கட்டிக்கொண்டு வந்தார்.
குசேலரின் வருகையை அறிந்த கிருஷ்ணர், அவரை வரவேற்று தன் சிம்மாசனத்தில் அமர வைத்து சேவை புரிந்தார். இதனால் கண் கலங்கிய குசேலர், தான் கொண்டுவந்த அவலை எப்படி கொடுப்பது என்று தயங்கினார். இதை புரிந்துகொண்ட கிருஷ்ணர், 'எனக்காக என்ன கொண்டு வந்திருக்கிறாய்' என்று கேட்டு, குசேலர் கொண்டு வந்த அவலை வாங்கி உண்டார்.
இதைப் பார்த்த குசேலர், "மன்னனாக ஆன பின்பும், என் மீது எத்தனை அன்பு வைத்திருக்கிறார். நான் எப்படி என்னுடைய வறுமையை சொல்லி உதவி கேட்பது. அப்படி கேட்டால் அது சுயநலம் அல்லவா" என்று எண்ணினார். ஆனால் எல்லாம் அறிந்த கிருஷ்ணர், அவலை உண்ட உடனேயே குசேலர் வீட்டை செல்வ செழிப்பாக்கினார். பின்பு, வீடு திரும்பிய குசேலர், தன் வீடு மாளிகையாக மாறி இருப்பதை கண்டு வியந்தார். இந்த நிகழ்வு நடந்தது ஒரு அட்சய திருதியை நாளில் தான்.