பாவம் தீர்க்கும் விஸ்வேஸ்வர சுவாமி

இந்த கோவிலின் தல மரமாக வில்வம் உள்ளது. இதில் உள்ள இலைகளை பறித்து சுவாமிக்கு திங்கள் கிழமை தோறும் அபிஷேகம் செய்கிறார்கள்.
Visweswarar Swamy
விஸ்வேஸ்வர சுவாமி
Published on

திருப்பூர் மாவட்டத்தில் பழமை வாய்ந்த கோவில்களில் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் முதன்மையானது. சுந்தரபாண்டியன் எனும் பாண்டிய மன்னன் கட்டிய கோவில் என்றும், இதனால் இந்தப் பகுதி ஒரு காலத்தில் சுந்தரபாண்டிய நல்லூர் என அழைக்கப்பட்டதாகவும் சொல்வார்கள். பின்னர் அது மருவி நல்லூர் என்று ஆகிவிட்டது.

சிவபெருமான்

இந்த கோவிலில் விஸ்வேஸ்வர சுவாமியாக சிவபெருமான் மூலவராக அமர்ந்து அருள்பாலிக்கிறார். உடனுறையாக விசாலாட்சி அம்மன் வீற்றிருக்கிறார். இந்த கோவிலின் தல மரமாக வில்வம் உள்ளது. இதில் உள்ள இலைகளை பறித்து சுவாமிக்கு திங்கள் கிழமை தோறும் அபிஷேகம் செய்கிறார்கள். காசிக்கு நிகரான தலம் என்று போற்றப்படும் விஸ்வேஸ்வர சுவாமியை மகா சிவராத்திரி நாளில் வந்து தரிசனம் செய்தால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நாளில் இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறுவது சிறப்பாகும். இந்நாளில் இங்கு வந்து வழிபாடு செய்தால் காசிக்கு சென்று வந்தால் என்ன பலன் கிடைக்குமோ அந்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

பாவங்கள்

மேலும் மனிதர்கள் இவ்வுலகில் செய்யும் தீராத பாவங்கள் இந்நாளில் தரிசனம் செய்பவர்களுக்கு தொலையும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் மூலவர்களை தவிர, பட்டி விநாயகர், சுப்பிரமணியர், நந்திதேவர், கங்கா தேவி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சரபேஸ்வரர் ஆகியோர் தனித்தனி கோவில்களில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள். இந்த கோவிலில் அமைந்துள்ள சரபேஸ்வரரை தொடர்ந்து 24 ஞாயிற்றுக்கிழமைகள் வணங்கி வந்தால் பில்லி, சூனிய ஏவல்கள் அனைத்தும் விலகி போகும் என்பது ஐதீகம்.

வியாழக்கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு முல்லைப்பூவை அணிவித்து மஞ்சள் வஸ்திரம், கொண்டை கடலை மாலை சார்த்தி வழிபட்டால் கல்வி வேள்விகளில் சிறந்து விளங்க முடியும். திங்கள் கிழமைகளில் பழங்கள் மற்றும் வில்வ அர்ச்சனைகள் செய்து வந்தால் நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். இத்தகைய பெருமை வாய்ந்த கோவிலில் இன்று மாலை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com