அன்னையை வழிபட்டு அருள் பெற்றோர்

ஒருமுறை ததீசி என்ற சிவபக்தருக்கும் திருமாலுக்கும் பகை ஏற்பட்டது. முப்பத்து முக்கோடி தேவர்களால் நடத்தப்பட்ட அபிஷேகம்.
அன்னையை வழிபட்டு அருள் பெற்றோர்
Published on

புராண இதிகாசக் காலங்களில் தத்தாத்திரேயர் பரசுராமர், அகத்தியர், துர்வாசர், திருமூலர் ஆகிய ஞானிமுனிவர்கள் அன்னையை வணங்கி அருள் பெற்றுள்ளனர்.

அன்னை வழிபாட்டின் வகைப்பாடு

அன்னையை வீரத்தாயாகப் போற்றி மறக்கருணை நெறியில் வழிபடுவது வடவர் மரபு. அவளை அழகும், அருளும் கொண்டவளாக அறக்கருணை நெறியில் வழிப்படுவது தென்னவர் மரபு.

இந்த தென்னாட்டு முறைக்கு ஸ்ரீ வித்யை என்று பெயர். இந்த ஸ்ரீவித்யைக்கு மூன்று கோணங்கள் உள்ளன. அவை 1. மந்திரம், 2. தந்திரம், 3. எந்திரம். ஸ்ரீவித்யையில் தேர்ச்சி பெற்றோர் உள்ளத்தால் சாக்தராகவும், நோக்கத்தால் சைவராகவும், அனுட்டானத்தால் வைணவராகவும் விளங்குவர்.

தென்னிந்தியாவில் அன்னைஅருள்பாலிக்கும் அருள் தலங்களில் அளப்பரிய பெருமை மிக்க தலம். கருணை ஊற்றெடுக்கும் வேற்காட்டுத் தலம். அத்தலத்தின் வரலாற்றையும் பெருமையையும் அறிவதும், அத்தலத்தை நினைப்பதும், அங்கு சென்று அன்னையைத் தரிசிப்பதும் நம்மை உயர்விக்கும் உய்விக்கும்.

திருவேற்காட்டுத் தலத்தின் வரலாறு

மண்ணளக்கும் தாய் திருவேற்காட்டில் மகிமையுடன் வீற்றிருக்கிறாள். திருவேற்காடு... புண்ணிய பூமி.... புனிதத்தலம்.... கருமாரியம்மனின் கருணை நிலையம். இது சென்னைக்கு வடமேற்கு திசையில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது.

அந்த காலத்தில் வெள்வேல மரங்கள் இங்கு அதிகம். எனவே வேற்காடு எனப்பெயர் பூண்டது. நான்மறைகளே வெள்வேல மரங்களாகி நின்ற வரலாறு இதோ!

வெள்வேல மரங்களின் வரலாறு

பிரளயம்... அது யுகமுடிவில் வருவது... வெள்ளம் பெருகி உலகை மூழ்க வைப்பது உலகின் முடிவு. அது போன்ற ஒரு முடிவும் ஒரு முறை வந்தது. வெள்ளத்தால் உலகம் முடிவுற்றது. முடிவுக்குப் பின் மீண்டும் தொடக்கமல்லவா? சிவபெருமான் மீண்டும் உலகைப் படைக்க எண்ணினார். வெள்ளம் வற்றியது.

பின் வேதங்களை குறிப்பிட்ட இடத்தில் மரங்கள் ஆக்கினார். அவற்றின் அடியில் லிங்கம் தோன்றியது. லிங்கத்துடன் அன்னையும் தோன்றினாள். அன்னையின் அருளால் மீண்டும் தேவர்களும், மும்மூர்த்திகளும் தோன்றினர். மீண்டும் அகிலாண்ட இயக்கம் ஆரம்பமானது.

வெள்வேல மரமும், அதனடியில் லிங்கமும், அன்னையும் தோன்றிய இடம் திருவேற்காடு. தேவர்கள் தோன்றிய அவ்விடத்தின் ஒரு பகுதி தேவர் கண்ட மடு என்று அழைக்கப்பட்டது. வேற்காட்டின் வரலாறு இதுதான். இந்த வேற்காடு பாலி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

பாலி நதியின் வரலாறு

அவுணர்கனை அழிக்கப் புறப்பட்டான் முருகப்பெருமான். அந்த அன்பு தெய்வத்திற்கு பாலாபிஷேகம். காமதேனுவின் மகள் நந்தினிப் பசு. அந்த நந்தினியின் பாலில் கந்தக் கடவுளுக்கு அபிஷேகம். முப்பத்து முக்கோடி தேவர்களால் நடத்தப்பட்ட அபிஷேகம்.

பால் ஆறாகப் பெருகிறது. பெருகிப் பெருகி மண்ணில் பாய்ந்தது. பொங்கி வழிந்து புறப்பட்டது. அதுதான் பாலி ஆறு என்று பெயரும் பெற்றது. அந்த பாலி ஆற்றின் கரையில் அமைந்த தலமே திருவேற்காடு.

விஷங்கள் தீண்டாத வேற்காட்டின் வரலாறு

ஒருமுறை ததீசி என்ற சிவபக்தருக்கும் திருமாலுக்கும் பகை ஏற்பட்டது. கார்மேக வண்ணன் கடுங்கோபம் கொண்டான், கடவுளுக்கும் கோபம்... சினத்தீ சிறுமையில் தள்ளும் அதுவும் யார் மேல் கோபம்? சிவத் தொண்டன் மீதா?

தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிதாயிற்றே!

நீலமேக வண்ணன் ததீசியின் மேல் போர் தொடுத்தான். பல கணைகளை வீசினான். ததீசியை சிவபக்தி காத்தது. கணைகள் வீணாயின. இறுதியில் சக்கரத்தை எடுத்தான் தாமோதரன். ஏவினான் முனிவன் மேல்... சுதர்சனம் ஒளியைக் கக்கிக் கொண்டு ஓடியது. ததீசி முனிவன்மேல் மோதியது. ஆயினும் பயனென்ன? சுதர்சனம் வலிமை இழந்தது. கூர்மங்கி சுருண்டு விழுந்தது.

தாமரைக் கண்ணன் மனம் தளர்ந்தான். சுதர்சனமின்றிச் சோர்வுற்றான். ஈசனை எண்ணிப் பூசிக்க முனைந்தான். அவன் பூசித்த அந்த இடம் திருவேற்காடு.

தினந்தோறும் ஆயிரம் மலர்களை எண்ணி வைத்து ஈசனை பூசிக்க எண்ணம் கொண்டான். அதன்படி ஆயிரம் தாமரைப்பூக்கள் அன்றாடம் ஈசனின் திருவடிகளை ஆராதித்தன.

ஒரு நாள் இறைவன் அந்தத் திருமாலைச் சோதித்தான். சிவ சோதனைக்குத் திருமால் மட்டும் விதி விலக்கா என்ன? ஆயிரம் மலர்களில் ஒன்று குறைந்தது. பூசை பூரணத்துவம் அடையாது நின்றது.

உடனே உணர்ச்சி பெருக்குடன் ஒரு காரியம் செய்தான். சியாமள வண்ணன். தனது ஒரு கண்ணைப் பெயர்த்தான். உதிரம் கொட்டக் கொட்ட ஆண்டவனின் பரதத்தில் சமர்ப்பித்தான்.

இறைவன் மாலவனின் தியாகத்தை எண்ணி மகிழ்ந்தான். இழந்த திருச்சக்கரத்தை மீண்டும் வழங்கினான். கண்ணை அர்ப்பணித்த கார்முகில் வண்ணனுக்குக் கண்ணன் என்ற பெயரும் வழங்கினான். இந்த தியாக வரலாற்றை அருகிருந்து கண்ணுற்றான் ஆதிசேடன். இந்த மண் புனிதமானது. எனது தலைவனின் ரத்தம் சிந்திய இடம் இது. எனவே இந்த இடத்தில் எங்கள் பாம்பு இனத்தால் யாரும் இரத்தம் சிந்தக்கூடாது என சங்கல்பம் செய்தான்.

ஆகையால் தான் இன்று வரை இங்கே எந்த உயிரையும் அரவம் தீண்டியதாக வரலாறு இல்லை.

ஆயிரம் மலர்கள் வைத்துப்பூசித்த இடம் இன்றும் உள்ளது. அது திருவேற்காட்டின் பகுதி... கண்ணபாளையம்... அரவங்கள் விடம்தீண்டாத வரலாறு இதுதான்.

அகத்தியருக்குக் காட்சி தந்த அருள் வரலாறு

ஒரு முறை அம்மைக்கும், அப்பனுக்கும் திருமணம். குழந்தைகள் நடத்தும் கோலாகலத் திருமணம். இறைவனின் இனிய லீலைகளில் ஒன்று. தேவர்கள், யக்ஷர்கள், முனிவர்கள், கந்தர்வர், கின்னார், கிம்புருடர் என ஏராளமானோர் திரண்டனர்.

கைலாயம் கலங்கியது. தெய்வசக்தி ஒரே இடத்தில் திரண்டதால் பூதேவி ஒரு பக்கமாகத் தாழ்ந்தாள்.

அனைவருக்குமே அம்மையப்பனின் திருமணத்தைக் காண ஆவல். இந்த நிலையில் ஒரு பக்கமாகத் தாழ்ந்தது உலகம். அனைவரும் அஞ்சினர். ஆண்டவனிடம் முறையிட்டனர்.

அஞ்சாதீர்கள் குழந்தைகளே என்று அபயக்கரம் காட்டினான் எம்பெருமான்.

ஒரு தட்டு சாய்ந்தால் இன்னொரு தட்டில் எடை கூட்டுகிறோம். அதுபோல ஒரு பக்கம் சாய்ந்த புவியை இன்னொரு பக்கம் எடையேற்றிக் கூட்டுவோம்.

வடக்கே தாழாதிருக்க தெற்கே எடையை ஏற்றுவோம்.

தெற்கே எவ்வாறு எடையேற்றுவது? வடக்கே கூடியுள்ள கூட்டத்தைப் போல மற்றொரு கூட்டத்தை நிற்க வைப்பதா?

தேவையில்லை. ஒரே ஒரு முனிவனை நிற்கவைப்போம். அதுவும் குள்ளமான முனிவனை...

என்னே அதிசயம். கோடானு கோடி மக்களுக்கு ஒரு குறுமுனி ஈடாவாரா?

ஆம்! கோடானு கோடி மக்களின் பக்திக்கு ஈடாகத்தான் அந்த குறுமுனிவனின் பக்தி விளங்குகிறது.

கும்பத்தில் தோன்றிய அகத்தியருக்கு ஈடு இணை யாருமில்லை பக்தியில்.

எனவே அம்மையப்பன் தனது மைந்தன் அகத்தியனை அழைத்தான்.

என் கண்ணே நீ தெற்கே நோக்கிச் செல்! அங்கே அறிவிற் சிறந்தோர் ஆயிரமாயிரம்! அங்கு சென்றால் உனக்கு அறிவு உலகத்தின் தலைமை பதவி கிடைக்கும் தித்திக்கும் செந்தமிழால் என்னை தினந்தோறும் பாடிடுவாய்.

அப்பா தங்கள் திருமணத்தைக் காணும் பாக்கியம் எனக்கில்லையா? சின்ன பிள்ளைதானே எல்லோர் வீட்டிலும் செல்லப்பிள்ளை! இந்த குள்ளப்பிள்ளையிடம் கண்ட குறை யாதோ? என்ற அகத்தியனுக்கு.

குறையன்றுமில்லை கண்மணியே! உலகம் உன்னால் சமநிலை பெற வேண்டுமல்லவா? அதனால்தான் உன்னை அனுப்புகிறேன். என் திருமணக்கோலத்தைக் காணாமல் போகிறோமே என்று கலங்காதே! கோடானு கோடி மக்கள் காணப்போகும் அந்த அற்புதக் காட்சியை உனக்கு மட்டும் தனியாகக் காட்டுகிறேன். திருவேற்காட்டில் எனது திருமணக் காட்சியை தரிசிப்பாய் என ஆண்டவன் திருவாய் மலர்ந்தருளினான்.

அந்த அகத்தியன் தென்னாடு வந்தான். தரிசனம் கண்டான். அந்த திவ்ய தரிசனம் அவனுக்கு மட்டுமல்ல. அன்று முதற்கொண்டு இன்று வரை திருவேற்காடு நோக்கி செல்லும் அனைவருக்கும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

வேலவன் வேல் பெற்ற வரலாறு

அவுணர்களை மாய்க்க அவதரித்த முருகன் நந்தினிப் பசுவின் பாலால் அபிஷேகம் செய்யப்பட்ட வரலாற்றைக் கண்டோமல்லவா? அந்தப் பாலே ஆறாக பாலி ஆறாகப் பாய்தோடியது அல்லவா? அந்த ஆற்றின் கரையில் அமைந்த திருத்தலம்தான் வேற்காடு என்றோமல்லவா?

அதே திருத்தலத்தில் வேலவனுக்கு அன்னையின் அருளாசியும் கிடைத்தது.

வேதபுரீசனாக அப்பன் வேற்காட்டில் அமர்ந்தான்.

பாலாம்பிகையாக அன்னை அவனுடன் உறைந்தாள். தன்பிள்ளைமேல் கொள்ளைப் பிரியும். என்னதான் ஈசனின் அம்சம் என்றாலும் அவனும் தாய்க்கு மகன்தானே கொடிய சூரனை மாய்ப்பதற்குக் குழந்தை முருகனால் கூடுமோ?

அன்னையின் பாசம் ஒருநிமிடம் அலைகழித்தது.

கண்ணுதலான் இதனைக் கவனித்தான்

அன்னைக்குக் குறிப்புணர்த்தினான்

கண்ணுதலோன் கண்நோக்க வேற்கண்ணி களிப்புற்றுக் குதூகலித்து அன்பு கூர்ந்து

மண்ணவரும் விண்ணவரும் வாழ்வுறவும்

அவுணர்குலம் அறக்களைவாய் என்றுரைத்து

எண்ணற்ற எழுபரிதிச் செழுஞ்சுடரின் ஒளிவிஞ்சச்

சுடர்வேலைக் கரத்தெடுத்து

கண்மணியாம் சேயவனின் கரமீந்து அருள்புரிந்தாள்

கண்ணுதலோன் உவகையுற்றான்

என்று தேவி கருமாரியம்மன் புராணம் செப்பும் வண்ணம் வேல் பெற்றான் குமரக்கடவுள். அந்த வேல்&கந்தவேல்-கருமாரி அன்னையின் திருக்கரத்தால் பெற்ற வேல்-திருவேற்காட்டில் வழங்கப்பட்ட வேல் ஆகும். வேல் ஈந்த பாலாம்பிகை அன்னை வேற்கண்ணி எனப் பெயர் பெற்றாள்.

அந்த வேற்கண்ணியைத் தொழுது பணிந்து அங்கே வேலால் ஒரு தீர்த்தம் செய்தான் வேதவல்லி மகன். அத்தீர்த்தமே வேலாயுதத் தீர்த்தமாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com