சிவன் சிரித்தார் அசுரர்கள் அழிந்தனர்

திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார்.இக்கோவிலில் அம்பாள் சன்னதி வலதுபுரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவன் சிரித்தார் அசுரர்கள் அழிந்தனர்
Published on

சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார்.

வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்கு செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன.

இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரகள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலக படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார்.

இச்சமயம் ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத் தொடங்கின. இறைவன் இவ்வாறு ஒவ்வொருவரும் கர்வம் கொண்டிருப்பதை கண்டார்.

தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்தார்.

திரிபுரவாதிகள் திருவதிகைக்கு தெற்கேயும், ஈசன் திருவதிகையிலும் இருந்து போர் புரிந்தனர். அசுரர்கள் மூவரும் ஈசன் தங்களை அழிக்கும் போது தாங்கள்பெற்ற வரத்தினால் கோட்டைகள் மூன்றும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அழிக்கும் வேலை பகலாகவோ அல்லது இரவாகவோ இருக்கக் கூடாது. மிக முக்கியமாக ஈசனுக்குக் கோபம் இருக்கக் கூடாது போன்ற கட்டுபாடுகளுடன் வரம்பெற்றிருந்தனர்.

திரிபுரவாதிகளும் ஈசனும் போர் புரியும்போது கொடுத்த வரத்தினால் ஈசன் புன்னகை கொண்டிருந்தார். இதை கண்ணுற்ற அசுரர்கள் ஈசனுக்குக் கோபம் வரவழைக்க ஈசனின் இடபாகம் அமர்ந்த தேவியை தருமாறு கேட்டனர். ஈசன் புன்னகைத்துக் கொண்டே தேவியை நோக்கினார். கேட்டவர்க்கு கேட்டதை கொடுத்து விடும் ஈசன் எங்கே தன்னையும் கொடுத்து விடுவாரோ என்று பயந்து அம்பிகை ஈசனுக்கு வலபுரம் வந்து விட்டார்.

(இத்திருக்கோவிலில் அம்பாள் சன்னதி வலதுபுரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.) இந்நிகழ்ச்சி நடந்த இடம் திருவதிகைக்கு மேற்கே வீரப்பெருமாநல்லூர் எனும் ஊர் என்பர்.

தேவியை கேட்டவுடன் கோபம் கொண்ட ஈசன் `சிரித்தேன் எரித்தேன்' என்று அம்பு தொடுத்தார். தேவர்களின் செருக்கு அடங்க புன்னகையும், சிவபூஜை தவறாத திரிபுர அசுரர்கள் உய்யுமாறு தண்ணகையும், சிவபூஜை தவறிய முப்புரவாசிகள் மடியுமாறு வெந்நகையும் ஆகிய இம்மூன்றையும் இத்தல சிவபெருமான் செய்தார்.

அவர் சிரித்த உடனேயே கோட்டைகள் மூன்றும் பொடிப்பொடியாக பொசுங்கிப் போயின. இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை.

சிவபெருமான் முப்புரவாசிகளில் இருவரை வாயிற்காப்பவனாக (துவாரபாலகர்), நியமித்தார். அவர்களில் ஒருவர் சங்கநாதம் வாசித்துக் கொண்டும், மற்றொருவர் யாழ் வாசித்துக் கொண்டும் இருப்பதை திரிபுரசம்கார மூர்த்தி சன்னதி வாசலில் காணலாம். ஒருவரை குடமுழா முழக்குபவராக தமது அருகில் இருக்கும்படி அருளி மறைந்தார்.

அசுரர்களின் கோட்டை எரிந்தும் எரியாமலும் வேகாமல் நின்ற பகுதி `வேகாகொள்ளை' என இன்றளவும் கூறப்படுகிறது. இது இச்சரித்திரத்திற்கு ஒரு சான்றாக அமைகிறது. இந்த வேகாகொல்லை என்னும் ஊரில் சூளைகள் வேகாமல் நின்று போவதும் இன்று வரை கண்கூடாக அதிசயமாகக் காண முடிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com