‘மூச்சை அறிந்தவனே வாழ்க்கையை அறிந்தவன்’: மருத்துவம் அறிவோம்-129

தியானத்தில் மூச்சை கவனிப்பதனையே அதிகம் வலியுறுத்துகின்றனர்.
‘மூச்சை அறிந்தவனே வாழ்க்கையை அறிந்தவன்’: மருத்துவம் அறிவோம்-129
Published on

மனித வாழ்வின் அடிப்படை இயக்கம் மூச்சு. உணவு இல்லாமல் மனிதன் சில நாட்கள் வாழ முடியும். தண்ணீர் இல்லாமல் கூட சில நாட்கள் தாங்க முடியும். ஆனால் மூச்சு இல்லாமல் சில நிமிடங்கள் கூட இருப்பது கடினம்தான். இதனால்தான் இதனை ‘பிராணன்’ என்று சொல்கின்றோம். பிராணன் என்பது வெறும் காற்று அல்ல. அது உயிரின் சக்தி. நவீன மருத்துவ அறிவியலில் மூச்சு என்பது ஆக்சிஜனை உடலுக்குள் சேர்த்து கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றுவது ஆகும்.

இதன் மூலம் ஒவ்வொரு செல்லுக்கும் சக்தி கிடைக்கின்றது. மூச்சின் தரம் வாழ்க்கையின் தரத்தினை நிர்ணயிக்கின்றது. மூச்சு நம் உடலின் அமைப்புகளுடன் நேரடித் தொடர்பு உடையது. இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், நரம்பு மண்டலம், மூளை செயல்பாடு என அனைத்தையும் மூச்சு பாதிக்கும். மெதுவான ஆழ்ந்த மூச்சு நரம்பு மண்டலத்தை செயல்படுத்தி மன அமைதி அளிக்கின்றது. இதனால் மன அழுத்தம் குறையும். உயர் ரத்த அழுத்தம் குறையும். தூக்கம் சீர்படுகின்றது.

யோகா பயிற்சியில் மூச்சு பயிற்சி உயர் சக்தியினை ஒழுங்குப்படுத்தும் முறையாக அமைகின்றது. மன அமைதி, கவன ஒருமை ஏற்படுகிறது.

மருத்துவ துறையில் கூட மூச்சுப் பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

தியானத்தில் மூச்சை கவனிப்பதனையே அதிகம் வலியுறுத்துகின்றனர்.

பொதுவில்

* சாதாரண மூச்சு நிமிடத்திற்கு 12 முதல் 20 மூச்சுகள் இருக்கும். நம்மை அறியாமலேயே இந்த இயக்கம் இருக்கும்.

* ஆழ்ந்த வயிற்று மூச்சு -இந்த மூச்சு எடுக்கும் போது வயிறு விரியும். நுரையீரல் முழுவதும் காற்று நிரம்பி மன அழுத்தம் குறையும்.

* மார்பு மூச்சு- மார்பு மட்டும் உயர்ந்து இறங்கும். கவலை உள்ளவர்களுக்கு இது அதிகம் இருக்கும்.

* கலப்பு மூச்சு- வயிறு மற்றும் மார்பு இரண்டும் சேர்ந்து இயங்கும்.

* மெதுவான மூச்சு- ஒரு நிமிடத்திற்கு 6 முதல் 8 முறை மட்டுமே மூச்சு இயக்கம் இருக்கும். இது நன்மையே.

* வேகமான மூச்சு- ஒரு நிமிடத்தில் 20-க்கும் மேல் இருக்கும். பயம், உடற்பயிற்சி, காய்ச்சல் போன்ற நேரங்களில் இவ்வாறு இருக்கும்.

* நீளமான உள்ளிழுக்கும் மூச்சு- ஆழமாக உள்ளிழுத்து நுரையீரல் விரிவடையும்.

* நீளமான வெளியேற்ற மூச்சு- மூச்சு மெதுவாக வெளியேறுவது நரம்பு அமைதியை தரும்.

* இடை நிறுத்த மூச்சு- உள்ளிழுத்த பிறகு சில விநாடிகள் தடுத்து வைக்கும்.

* சீரற்ற மூச்சு- மூச்சு வேகம் மற்றும் ஆழம் ஒருங்கின்றி இருக்கும்.

* தன்னிச்சை மூச்சு- மனிதன் நினைக்காமல் நடக்கும் மூச்சு.

* கட்டுப்படுத்தப்பட்ட மூச்சு- யோகாவில் கற்றுக் கொள்ள வேண்டும்.

* மூச்சு தடை- தற்காலிக மூச்சு நிறுத்தம்.

* மூன்று திணறல்- மூச்சு விட சிரமம்.

* அதிவேக மூச்சு- உணர்ச்சி காரணமாக ஆழமாக மூச்சு எடுப்பது.

* சுமூக மூச்சு- மன அமைதி தரும் சீரான மூச்சு.

* மூக்கால் மூச்சு- மூச்சு காற்றினை வடிகட்டி ஈரப்பதம் தரும்.

* வாய் மூச்சு- அவசர நிலையில் மட்டுமே இயல்பாக பயன்படுத்தப்படும்.

கமலி ஸ்ரீபால்
கமலி ஸ்ரீபால்

யோகா பிராணாயாம மூச்சு முறைகள்-

* நாடி சோதனை பிராணாயாமம்- மாற்றி மாற்றி மூக்கால் மூச்சு எடுப்பது. இதனால் ஏற்படும் நன்மை-நரம்பு சமநிலைப்படும்.

* கபாலபதி- வேகமாக மூச்சை வெளியேற்றும் முறை. நன்மை- நுரையீரல் சுத்தப்படும்.

* பஸ்த்ரிகா பிராணயாமம்- வெகுவாக உள்ளிழுத்து வெளியேற்றுவது.

* உஜ்ஜயி பிராணாயாமம்- தொண்டையை சற்று இறுக்கி மூச்சு எடுப்பது.

* சீதளி பிராணாயாமம்- நாக்கை குழாய் போல சுருட்டி குளிர்காற்றை உள்ளிழுப்பது.

* சீதகாரி பிராணாயாமம்- பற்கள் இடைவெளியில் காற்றை இழுப்பது.

* பிரமரி பிராணாயாமம்- தேனி ஓசை போல ஒலி எழுப்பி காற்றை வெளியேற்றுவது.

* பிளாவினி பிராணாயாமம்- நுரையீரலில் காற்று நிரப்பி சற்று நேரம் தாங்குவது.

* சூர்ய பேதனம்- வலது மூக்கால் மூச்சு விடுதல்.

* சந்திர பேதனம்- இடது மூக்கால் மூச்சு விடுதல்.

* அனுலோம விலோமம்- மாற்றி மாற்றி மூச்சு விடுதல்.

* சமவருத்தி- உள்ளிழுத்தல், வெளியேற்றுதல் சம அளவு இருத்தல்.

* கும்பகம்- மூச்சை தடுத்து வைப்பது

* சக்கர மூச்சு- சக்தி மையங்களை உணர்ந்த மூச்சு

* மந்திர மூச்சு- ஓம மூச்சு, குண்டலினி மூச்சு- ஆற்றல் எழுச்சிக்கான பயிற்சி, தியான மூச்சு- மூச்சில் கவனம் செலுத்தி தியானம் செய்தல்.

இன்னும் பல வகைகள் உள்ளன. இவை அறிந்து கொள்ள மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. மற்றபடி தகுதி வாய்ந்த யோகா பயிற்சியாளர் மூலம் மட்டுமே கற்க வேண்டும்.

* மேலும் சிங்க மூச்சு, நாய் மூச்சு, முயல் மூச்சு, ஆமை மூச்சு, குதிரை மூச்சு, விபாசனா மூச்சு என விவரித்துக் கொண்டே போகலாம்.

தினசரி வாழ்வில் மூச்சுப் பயிற்சி என்பது இன்றைய கால கட்டத்தில் மிக அவசியம் ஆகின்றது.

* மன அழுத்தம் குறைகின்றது. கவனம் அதிகரிக்கின்றது.

* தூக்கம் மேம்படும். உடல் சக்தி அதிகரிக்கின்றது. இதனை நீங்கள் நல்ல பயிற்சியாளர் மூலம் மட்டுமே கற்று பயில வேண்டும்.

* உடல் சக்தி அதிகரிக்கின்றது.

சரியான மூச்சு வாழ்க்கையினை மாற்றும் சக்தி கொண்டது.

ஒரு எளிய நடைமுறை

* அமைதியான இடத்தினை தேர்ந்தெடுங்கள்.

* மெதுவாக மூக்கால் மூச்சை உள்ளிழுங்கள்.

* வயிறு விரிய அனுமதியுங்கள்.

* மெதுவாக வெளியேற்றுங்கள்.

* இதனை 5 முதல் 10 நிமிடங்கள் தொடருங்கள்.

இதனை செய்யும் போது வயிறு காலியாக இருத்தல் அவசியம். காலை நேரம் சிறந்தது. நிதானமாக செய்யுங்கள். முரட்டுத்தனம் வேண்டாம்.

மூச்சு என்பது உடல், மனம், ஆன்மா மூன்றையும் இணைக்கும் பாலமாகும். யோகத்தில் மூச்சு பிராண சக்தியின் ஒட்டமாக கருதப்படுகின்றது. மருத்துவத்தில் உயிர் செயல்பாட்டின் அடிப்படை எந்திரமாக பார்க்கப்படுகின்றது. இரண்டும் ஒன்றினையே கூறுகின்றன.

சரியான மூச்சு வாழக்கையை மாற்றும் சக்தி கொண்டது

* மெதுவான ஆழ்ந்த மூச்சு- இதய படபடப்பினை நீக்கும். * ரத்த அழுத்தம் குறையும். * மனம் அமைதியாகும். * கவனம் அதிகரிக்கும்.

நுரையீரல் சுமார் 300 மில்லியன் சிறிய காற்றுப் பைகளை கொண்டது. இவை ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு பரிமாணத்திற்கு உதவுகின்றன. ஆழ்ந்த மூச்சு எடுக்காதவர்கள் இந்த காற்று பைகளை முழுமையாக பயன்படுத்த முடியாது. அதனால் * நுரையீரல் திறன் குறையும். ஆக்சிஜன் வழங்கல் குறையும். * சோர்வு அதிகரிக்கும். * ஆழ் மூச்சு பயிற்சி நுரையீரல் திறனை அதிகரிக்கின்றன.

மெதுவான மூச்சு- இதய துடிப்பை ஒழுங்குப்படுத்துகின்றது. * ரத்த அழுத்தம் குறைகிறது. * ரத்த ஓட்டம் மேம்படுகின்றது. இதனால் இதய நோய் அபாயம் குறைகின்றது.

மூச்சு மற்றும் மனநலம்

மன அழுத்தம், கவலை, பானிக் அட்டாக் போன்ற பிரச்சினைகளில் மூச்சு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல உளவியல் சிகிச்சை முறைகளில் மூச்சு பயிற்சி அளிக்கப்ப டுகின்றது.

மெதுவான மூச்சு- * ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அளவினை குறைக்கின்றது. * மன அதைியை ஏற்படுத்துகின்றது. * தூக்க தரத்தினை மேம்படுத்துகின்றது.

விபாசனா- தியான முறையில் மூச்சின் இயல்பான ஓட்டத்தினை கவனிப்பதே முக்கிய பயிற்சி. இந்த முறையில் * மனம் நிகழ் காலத்தில் நிலை நிறுத்தப்படுகின்றது. * எண்ண ஓட்டம் குறைகிறது. * உள்ளுணர்வு அதிகரிக்கின்றது.

மூச்சு பயிற்சி மூலம் நாம் பிரபஞ்சத்துடன் நம்மை தொடர்பு படுத்திக் கொள்ள முடியும் என யோக சித்த ஆய்வு, நூல்கள் கூறுகின்றன. சித்த வழி முறைகளில் இது முக்கியமான ஒன்று.

* ஒவ்வொரு முறை மூச்சினை உள்ளிழுக்கும் பொழுதும் தூய பிரபஞ்ச சக்தியோடு நாம் இருக்கின்றோம் என்று நினைவில் கொள்ள வேண்டும்.

யோகத்தில் மூச்சு வெறும் உயர் இயக்கம் மட்டும் அல்ல. பிரபஞ்சத்துடன் நம்மை இணைக்கும் நூல் பாலம்.

* மூச்சை மெதுவாகவும் ஆழமாகவும் எடுத்துக் கொள்ளும் போது மூளை அமைதி அடைகின்றது. மன அழுத்தம் நீங்குகின்றது. உடல், மனம் ஒருங்கிணைந்து மனிதன் தன்னுள் இருக்கும். பிரபஞ்ச சக்தியினை உணரத் தொடங்குகின்றான்.

இதனை மூச்சின் ஆழ்ந்த ரகசியம் என்கின்றனர். வாழ்வின் தரம் உயரும் என்கின்றனர்.

* மனித உடலே சிறிய பிரபஞ்சம்தான்.

இன்று அனைவருக்கும் காசில்லாமல் கிடைப்பது மூச்சு மட்டும்தான். அதனையாவது வீணடிக்காது உடல் நலத்தினையும், உள்ள நலத்தினையும் மேம்படுத்திக் கொள்ளலாமே.

தகுந்த பயிற்சியாளரிடம் பயிலாமல் செய்வது மிகத் தவறு. எனவே உடனே தகுந்த பயிற்சியாளரிடம் சென்று பயிலுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com