என் மலர்
புதுச்சேரி

புதுவை அண்ணாசாலையில் வாகனங்கள் அணிவகுத்து சென்ற காட்சி.
அண்ணாசாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
- மல்டி லெவல் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுமா?
- சில நேரங்களில் 2 சக்கர வாகனங்களை நாங்கள் பறிமுதல் செய்கிறோம்.
புதுச்சேரி:
புதுவையில் பிரதான சாலைகளில் அண்ணா சாலையும் ஒன்று. இங்குள்ள கடையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரள்வதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அண்ணா சாலையின் இருபுறமும் மினி லாரிகள், ஷேர் ஆட்டோக்கள், 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் விதியை மீறி நிறுத்தப்படுகின்றது.
இதனால் ராஜா தியேட்டர் சந்திப்பில் இருந்து புஸ்ஸி தெரு சந்திப்பு வரை போக்குவரத்து மிகவும் நெரிசலாகவே காணப்படுகிறது.
இதற்கு காரணம் போக்கு வரத்து போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் இல்லாததே என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு இடையூறாகவும் அந்த சாலை காணப்படுகிறது. மதுகடைகள் ஏராளமாக உள்ளதாலும் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.
இதனால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக காணப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் போக்குவரத்து துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறியிருப்பதாவது:-
போக்குவரத்து விதியை மீறுகிறவர்களுக்கு எதிராக அபராதம் விதித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தாலும் அவர்கள் விதியை மீறி தான் செல்கின்றனர்.
சில நேரங்களில் 2 சக்கர வாகனங்களை நாங்கள் பறிமுதல் செய்கிறோம். 4 சக்கர வாகனங்களை கிரேன்கள் மூலம் எடுத்துச் செல்கிறோம். பெரும்பாலான வணிக வளாகங்களில் வாகன நிறுத்துமிடம் இல்லை.
இதனால் அங்கு செல்கின்ற வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலை ஓரம் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் நெரிசல் ஏற்படுகிறது.
மல்டி லெவல் வாகன நிறுத்து மிடங்கள் வந்தால்தான் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணமுடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.
அண்ணா சாலை மட்டு மல்லாது நேருவீதி, மகாத்மா காந்தி சாலை உள்ளிட்ட மிகப்பிரதான சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதற்கு தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






