தஞ்சை அருகே எமதர்மராஜா கோவில்: ஜனவரி 22-ந்தேதி கும்பாபிஷேகம்

தஞ்சை அருகே ரூ.3 கோடி செலவில் கிராம மக்களே கட்டி முடித்த எமதர்மராஜா கோவிலுக்கு ஜனவரி 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது
தஞ்சை அருகே எமதர்மராஜா கோவில்: ஜனவரி 22-ந்தேதி கும்பாபிஷேகம்
Published on

தமிழகத்திலேயே தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் தான் எமதர்மராஜாவுக்கு என தனிக் கோவிலே அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டாக கூறப்படுகிறது. பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த இக்கோவிலில் எமதர்ம ராஜா எருமை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

எமதர்மராஜா கோவிலுக்கு தினமும் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். எமதர்மனை வழிபட்டால் தீர்க்க ஆயுசு என்றும் நோய்- நொடிகள் அண்டாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம் என்றும் பக்தர்களால் நம்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவில் கட்டிடங்கள் முழுவதுமாக சிதல மடைந்தது. இதனால் கோவிலை இடித்து விட்டு அதே இடத்தில் மீண்டும் புதிதாக கட்ட கிராம மக்களே முடிவு செய்தனர்.

புதிய கோவில் கட்டப்படுவதால் அதுவரை எமதர்மராஜா சிலையை கோவில் அருகில் ஒரு கீற்றுகொட்டகை வைத்து கிராம மக்கள் வழிபட்டு வந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் திருப்பணி வேலைகளை கிராம மக்கள், மற்றும் திருப்பணி குழுவினர் ஒற்றுமையுடன் இணைந்து தொடங்கினர்.

சுமார் ரூ.3 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று தற்போது புதிதாக கோவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. மேலும் மகாபலிபுரத்தில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் புதிதாக எமதர்மராஜா மற்றும் பரிவார தெய்வங்களின் சிலைகள் செய்யப்பட்டுள்ளது.

எமதர்மராஜா கோவிலில் திருப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வேலைகள் மட்டுமே உள்ளது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் வருகிற 2018-ம் ஆண்டு ஜனவரி 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

உயிரை பறிக்கும் எமனுக்கு சிறுகோவில் அமைத்து கடந்த 1300 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபட்டு வருகிறோம். முதலில் மண்ணால் ஆன சிலையை வைத்து வழிபாடு நடத்தி வந்தோம்.

தற்போது ரூ.3 கோடி செலவில் புதிதாக கோவிலை கட்டி உள்ளோம். 2 டன் எடையில் சுமார் 6 அடி உயரத்தில் எமனுக்கு கற்சிலையை வடிவமைத்து பிரதிஷ்டை செய்ய உள்ளோம்.

இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் ஆயுள் நீடிக்க வேண்டி கொள்கிறார்கள். சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் இங்கு ‘ஆயுள் விருத்தி ஹோமம்’ நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கிராம மக்கள், மற்றும் திருப்பணி குழுவினரே இணைந்து ரூ.3 கோடி செலவில் எமதர்ம ராஜா கோவிலை புதிதாக கட்டி முடித்து கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்து வருவது அவர்களது ஒற்றுமைக்கும், ஆன்மீக பணிக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள், மற்றும் பக்தர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com