ஓணம் பண்டிகையையொட்டி குமரி பகவதி அம்மனுக்கு ஓணக்கோடி பட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு

ஓணம் பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் பகவதி அம்மனுக்கு ஓணக்கோடி பட்டு அணிவித்து மூன்று நாட்கள் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
ஓணம் பண்டிகையையொட்டி குமரி பகவதி அம்மனுக்கு ஓணக்கோடி பட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓணம் பண்டிகை விழா வருகிற 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை 3 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

முதல்நாள் உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி பச்சை நிறப்பட்டும் 4-ந் தேதி திருவோண நட்சத்திரத்தையொட்டி கேரள பாரம்பரிய உடையான வெண்பட்டும், 5-ந் தேதி அவிட்டம் நட்சத்திரத்தையொட்டி சிவப்பு நிறப்பட்டும் பகவதி அம்மனுக்கு ஓணக்கோடியாக அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

இந்த 3 நாட்களும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், தேன், இளநீர், பால், தயிர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேகம் முடிந்ததும் காலை 11 மணிக்கு பகவதி அம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் ஓணக்கோடி பட்டு அணிவித்து அலங்கார தீபாராதனை நடக்கிறது. இந்த ஓணக்கோடி பட்டு அணிவிக்கப்பட்ட அலங்கார தரிசனத்தைக் காண கேரள பெண் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு கோவிலில் நிர்மாலய பூஜை, விசுவரூப தரிசனம், அபிஷேகம், தீபாராதனை போன்றவைகள் நடக்கிறது. பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை, நிவேத்ய பூஜை, உ‌ஷ பூஜை, உ‌ஷ தீபாராதனை போன்றவைகளும் மதியம் உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை, அன்னதானம் போன்றவைகளும் நடக்கிறது.

மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும் இரவு 8 மணிக்கு அம்மனை பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள்பிரகாரத்தைச் சுற்றி மேள, தாளங்கள் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் பாரதி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவகுமார், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கோவில் தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் பயன்பெறும் வகையில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருக்கோவில் திட்ட நிதி மற்றும் நன்கொடையாளர்கள் நிதி மூலம் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அன்னதான திட்டநிதிக்கான உண்டியல் கோவிலின் வாடாவிளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த உண்டியல் மாதந்தோறும் இறுதியில் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அது போல இந்த மாதத்திற்கான அன்னதான உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது.

நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவகுமார், கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் ஆனந்த், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் இந்த அன்னதான உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூ. 31 ஆயிரத்து 898 வசூல் ஆனது.

X

Maalai Malar
www.maalaimalar.com