

உக்ரைனில் ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் நேற்று (திங்கள் கிழமை) நடத்திய தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலனஸ்கி "பயங்கரமான தாக்குதல்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்ட நிலையில் 40 பேர் காயமடைந்தனர்.
ரஷ்யா தனது அண்டை நாட்டின் மீது முழு அளவிலான படையெடுப்பை தொடங்கியதில் இருந்து, உக்ரைனின் உள்கட்டமைப்பை அழிக்கவும் மக்களின் மன உறுதியை குலைக்கவும் அதன் படைகள் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின்படி, 16,000-க்கும் மேற்பட்ட உக்ரேனிய பொதுமக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
ஏவுகணை தாக்குதல்:
உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணை தாக்குதல் ஒன்று மத்திய நகரமான டினிப்ரோவை தாக்கியதில், ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 29 பேர் காயமடைந்தனர் என்று டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத் தலைவர் ஒலெக்சாண்டர் ஹன்ஜா தெரிவித்தார்.
தெற்கு நகரமான ஜபோரிஜியாவில் ரஷ்ய ட்ரோன்கள் பயணிகள் மினிபஸ் ஒன்றை தாக்கியதில், ஒரு குழந்தை உட்பட மூவர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர் என்று ஜெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.
உயிரிழப்புகள்:
வடகிழக்கு சுமி பிராந்தியத்தில் ரஷ்ய ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் 69 வயதுடைய பெண் ஒருவரும், 77 வயதுடைய ஆண் ஒருவரும் கொல்லப்பட்டதாக தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு நகரமான கார்கிவில் (Kharkiv) பகல் நேரத்தில் நடத்தப்பட்ட ரஷ்யத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று அந்நகர மேயர் இஹோர் டெரெகோவ் கூறினார்.
உக்ரைனின் குறைந்தது ஆறு பிற பிராந்தியங்களிலும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய தாக்குதல்கள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்த கூடுதல் விவரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.