சாப்பாடு பிரியர்கள் மட்டுமின்றி, உலக மக்கள் அனைவரையும் தன் சுவையால் கட்டிப்போட்டுள்ள ஒரு மாயாஜால உணவு என்றால் அது பிரியாணி தான். அப்படிப்பட்ட கமகமக்கும் பிரியாணியைக் கொண்டாடும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை "உலக பிரியாணி தினமாக" கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் பிரியாணி என்ற பெயர் வருவதற்கு முன்பே, பண்டைய கால மக்கள் அரிசி, நெய், மஞ்சள், மிளகு ஆகியவற்றுடன் இறைச்சியைச் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டுள்ளனர். சங்க இலக்கியங்களில் இது 'ஊன்சோறு' என்று அழைக்கப்பட்டுள்ளது. இதுவே இன்றைய காலங்களில் மாறி பிரியாணியாக மாறியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
'பிரியாணி' என்ற வார்த்தை உருது மொழியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. முகலாய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில்தான் இந்த உணவு இந்தியாவில் இன்னும் பிரபலமடைந்தது.
பிரியாணி உருவானதற்குப் பின்னால் ஒரு போர்க்கள வரலாறும் உண்டு. ஒருமுறை முகலாயப் போர்க்களத்திற்குச் சென்ற மன்னர் ஷாஜகானின் மனைவி மும்தாஜ், அங்குள்ள போர் வீரர்களின் சோர்வான நிலையைக் கண்டு வருந்தினார். அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் அரிசியுடன் மசாலாக்கள் மற்றும் இறைச்சியைச் சேர்த்து ஒரு புதிய உணவைத் தயாரிக்க உத்தரவிட்டார். அதுவே பின்னாளில் உலகையே ஆளும் பிரியாணியாக மாறியதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
இன்று விசேஷங்கள், திருவிழாக்கள், வார இறுதி நாட்கள் என எங்கு பார்த்தாலும் பிரியாணி தான் பகிரப்படுகிறது, மக்களும் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்தியாவில் ஆன்லைன் மூலம் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிடப்படும் உணவுகளின் பட்டியலை எடுத்தால், அதில் எப்போதும் பிரியாணி தான் முதலிடத்தில் அசைக்க முடியாத உணவாக இருக்கிறது.