இறந்த பெண்ணின் உடலுடன் 13 மணி நேரம் விமானத்தில் பயணித்த பயணிகள் - ஏன் தெரியுமா?

விமானத்தில் பயணம் செய்யும் பயணியின் மரணம் பொதுவாக மருத்துவ அவசரநிலையாக கருதப்படுவதில்லை.
இறந்த பெண்ணின் உடலுடன் 13 மணி நேரம் விமானத்தில் பயணித்த பயணிகள் - ஏன் தெரியுமா?
Published on

லண்டன்:

சீனாவில் உள்ள ஹாங்காங்கில் இருந்து நேற்று லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 331 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் இருந்தனர்.

அந்த விமானம் புறப்பட்ட சுமார் 1 மணி நேரத்தில் விமானத்தில் பயணம் செய்த 60 வயதான பெண் பயணி ஒருவர் உயிரிழந்தார். பெண் பயணி இறந்த நிலையில் அந்த விமானம் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தை அடைய 13.5 மணி நேரம் பயணம் செய்ய வேண்டி இருந்தது.

விமானத்தில் பயணம் செய்யும் பயணியின் மரணம் பொதுவாக மருத்துவ அவசரநிலையாக கருதப்படுவதில்லை. இதனால் விமானிகள் விமானத்தை மீண்டும் ஹாங்காங்கிற்கு திரும்ப கொண்டு செல்வதற்கு பதிலாக லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு செல்ல முடிவு செய்தனர்.

இறந்த பெண்ணின் உடலை ஆரம்பத்தில் கழிப்பறையில் வைக்கலாமா என்று விமான பணியாளர்கள் பரிசீலித்தனர். அதை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து அந்த பெண்ணின் உடல் துணியால் சுற்றப்பட்டு, விமானத்தின் பின்புறத்தில் உள்ள அறைக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டது.

அந்த பெண்ணுடன் அவரது குடும்பத்தினரும் பயணம் செய்தனர். பெண் மரணம் அடைந்ததால் அவரது குடும்பத்தினரும், விமான பணியாளர்களும் மிகுந்த மனவேதனையில் இருந்தனர். விமானத்தில் இருந்த பயணிகள் பலர் விமானத்தை ஹாங்காங்கிற்கு திருப்ப வேண்டும் என்றே விரும்பினர். ஆனால், அதை விமான பயணிகளும், நிர்வாகமும் ஏற்கவில்லை.

விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது, இறந்த பெண்ணின் உடலில் உருவான துர்நாற்றமானது, விமானத்தின் பின்பகுதி முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.

விமானம் லண்டனை நெருங்கியபோது, ​​அதில் பயணம் செய்த அனைத்து பயணிகளும், விமான பணியாளர்கள் பலரும், துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்தனர். விமானம் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் தரை இறங்கியதும், போலீசார் விமானத்தில் ஏறி, விசாரணை மேற்கொண்டனர். இதனால் விமானத்தில் இருந்த பயணிகளை சுமார் 45 நிமிடங்களுக்கு கீழே இறங்க அனுமதிக்கவில்லை. அனைத்து பயணிகளும் இருக்கையிலேயே அமர்ந்திருந்தனர்.

இந்தச் சம்பவத்தின்போது அனைத்து நடைமுறைகளும் சரியாக பின்பற்றப்பட்டதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் கூறியுள்ளது. அந்த விமான நிறுவனம் கூறுகையில், ‘விமானத்தில் பயணித்த ஒரு பயணி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அனைத்து நடைமுறைகளும் சரியாகப் பின்பற்றப்பட்டன’ என்று தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com