

அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் என்றும் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக இரு நாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் கடந்த 28-ந்தேதி ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். மேலும் மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவிடம் இருந்து சில முன்மொழிவுகள் வந்துள்ளதாக ஈரான் தரப்பு தெரிவித்தது.
இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், "ஈரானின் மின் கட்டமைப்புகளை தாக்காமல், 3 நாட்களாக அமெரிக்கா ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. ஆனால், தற்போதைய சூழலின் எதார்த்தத்தை ஏற்கத் தவறினால், இதுவரை இல்லாத மிகக் கடுமையாகத் தாக்குதலுக்கு ஈரான் உள்ளாக நேரிடும். ட்ரம்ப் வெறும் மிரட்டல் விடுப்பவர் மட்டுமல்ல" என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.