

காசாவில் 2023 அக்டோபர் முதல் 2 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த இஸ்ரேல் தாக்குதலில் 70,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதில் பாதி பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு இறுதியில் போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் அங்கு இன்னும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. பலர் தங்கள் வீடுகள் தரைமட்டக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகமாக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
மக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் செல்லும் பாதைகளை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளாதால் அங்கு உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் பசியாலும் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் உயிரிழக்கும் அவலம் தொடர்கிறது.
இந்த போர் காசா குழந்தைகளை மனதளவிலும் கடுமையாக பாதித்துள்ளது. இதற்கு உதாரணமாக அண்மையில் வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
விளையாட வேண்டிய வயதில், ஒரு பொம்மைக்குக் குழந்தைகள் இறுதிச்சடங்கு நடத்தும் இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உலகையே உலுக்கியுள்ளது.
காசாவில் உள்ள ஒரு அகதிகள் முகாமில் படமாக்கப்பட்ட இந்த வீடியோவில், சில சிறுவர்கள் அழுக்கு படிந்த ஒரு பொம்மையைச் சிறிய ஸ்டிரெச்சரில் வைத்து, மிகவும் அமைதியாகவும் கனத்த இதயத்தோடும் இறுதி ஊர்வலம் நடத்துகின்றனர்.
தினசரி தங்கள் கண்முன்னே நடக்கும் மரணங்கள், ரத்தக் கறைகள் மற்றும் இறுதிச்சடங்குகளைப் பார்த்து வளர்வதால், குழந்தைகளின் விளையாட்டுகளும் இப்போது மரணம் மற்றும் துக்கத்தைச் சுற்றியே அமைந்திருப்பதாக மனநல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
போரினால் அவர்கள் அனுபவிக்கும் கடுமையான மன ரீதியான பாதிப்பின் வெளிப்பாடே இது போன்ற செயல்கள் என்று கூறப்படுகிறது.
காசாவின் தெருக்களில் ஒரு காலத்தில் ஓடிப் பிடித்து விளையாடிய குழந்தைகளின் குரல்கள், இன்று அமைதியான இறுதி ஊர்வலங்களாக மாறியிருப்பது போரின் கோர முகத்தை உலகுக்குக் காட்டுகிறது.
Save the Children உள்ளிட்ட அமைப்புகள், காசா குழந்தைகள் கடுமையான மன வேதனையை அனுபவித்து வருவதாகவும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை இழந்து வருவதாகவும் தங்கள் அறிக்கைகளில் எச்சரித்துள்ளன.