

அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மந்திரி பென்-க்விர் விமர்சித்து இருந்தார். அந்த ஒப்பந்தத்தால் இஸ்ரேல் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும், சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணியாது என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல் மீது அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
தற்போதைய சூழலில் இஸ்ரேல் நாட்டின் மீது அனுதாபம் கொண்ட உலகின் ஒரே அரசுத் தலைவர் டிரம்ப் மட்டுமே. அவரை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பகிரங்கமாக விமர்சிக்கவில்லை.
ஆனால் அவரது அமைச்சரவையில் உள்ள சில உறுப்பினர்கள் நன்றியற்றவர்களாக நடந்துகொள்கிறார்கள். சர்வதேச சமூகத்தில் இஸ்ரேலுக்கு மிகக் குறைவான நண்பர்களே உள்ளனர்.
அமெரிக்கா வழங்கிய நிதியில் வாங்கப்பட்ட பெருமளவிலான ஆயுதங்களைக் கொண்டே அது தன்னைத் தற்காத்துக்கொண்டது. எந்தவொரு இறையாண்மை கொண்ட நாடும் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமையைக் கொண்டிருக்கிறது. அதை மறுக்க முடியாது.
இஸ்ரேலோ அல்லது ஈரானோ எந்தவொரு நாடும் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்று நீங்கள் சொல்ல முடியாது. ஈரானியர்கள் தங்கள் நாட்டில் தற்காப்பு உரிமையை விட்டுக்கொடுப்பதில்லை.
அதேபோல ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட்டுகளையோ அல்லது டிரோன் களையோ ஏவினாலும் இஸ்ரேல் தனது தற்காப்பு உரிமையை விட்டுக்கொடுப்பதில்லை.
இஸ்ரேலுக்கு டிரம்ப் ஒரு பிரச்சினை அல்ல; அமெரிக்க அதிபர்தான் தங்கள் மிகப்பெரிய பிரச்சினை என்று நினைக்கும் இஸ்ரேலில் உள்ள எவரும், தங்கள் நாடு தற்போதுள்ள யதார்த்த நிலையை உணர்ந்து விழித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.