சூடான் உள்நாட்டுப் போருக்கு ஆயுத சப்ளை செய்த இந்திய நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடை!

200க்கும் மேற்பட்ட முறை வெடிபொருட்கள் மற்றும் வெடிமருந்து சாதனங்களை அலோக் சௌத்ரி தலைமையிலான எஸ்பிஎல் எனர்ஜி நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.
சூடான் உள்நாட்டுப் போருக்கு ஆயுத சப்ளை செய்த இந்திய நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடை!
Published on

உள்நாட்டுப் போர்

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டில் பயங்கரமான உள்நாட்டுப் போர் வெடித்தது.

நாட்டின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டியே இந்த போருக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

இதனால் அந்நாட்டு மக்கள் மீதான தாக்குதல் மற்றும் பெருமளவிலான இடப்பெயர்வு, பஞ்சம் ஆகியவை அங்கு தலைவிரித்தாடுகிறது.

தடை

இந்நிலையில் சூடான் உள்நாட்டுப் போருக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கி ஆதரவளித்ததாகக் கூறி சத்தீஸ்கர் மாநிலத்தை தளமாகக் கொண்ட முன்னணி வெடிபொருள் தயாரிப்பு நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

அமெரிக்க நீதித்துறையின் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் பெயர் SBL எனர்ஜி லிமிடெட். அதன் தலைவர் அலோக் சௌத்ரி. அவர் மீதும் தனிநபர் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

டார்கெட்

அமெரிக்க நிதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2024ஆம் ஆண்டு முதல், சூடானில் உள்ள 'டார்கெட் மல்டி ஆக்டிவிட்டிஸ்' என்ற நிறுவனத்திற்கு 200க்கும் மேற்பட்ட முறை வெடிபொருட்கள் மற்றும் வெடிமருந்து சாதனங்களை அலோக் சௌத்ரி தலைமையிலான எஸ்பிஎல் எனர்ஜி நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.

இந்த டார்கெட் நிறுவனம் சூடான் நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான ஜியாட் இண்டஸ்ட்ரியல் குரூப் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு நிறுவனமாகும்.

இந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா ஏற்கனவே தடை விதித்துள்ளது. எஸ்பிஎல் எனர்ஜி வழங்கிய வெடிபொருட்களைக் கொண்டுதான் சூடான் ஆயுதப் படைகள் அப்பாவி மக்கள் மீது வீசுவதற்கான குண்டுகளைத் தயாரித்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

முடக்கம்

இந்தத் தடையின் மூலம், அலோக் சௌத்ரி மற்றும் எஸ்பிஎல் எனர்ஜி நிறுவனத்திற்கு அமெரிக்காவில் உள்ள அனைத்துச் சொத்துக்களும், நிதிப் பரிவர்த்தனைகளும் உடனடியாக முடக்கப்படுகின்றன.

மேலும், அமெரிக்கக் குடிமக்கள் அல்லது அமெரிக்க நிறுவனங்கள் இவர்களுடன் எவ்விதமான வணிக அல்லது நிதித் தொடர்புகளையும் வைத்துக்கொள்ளக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனத்தின் இந்த அழிவுகரமான செயல்பாடுகளை விசாரித்து சத்தீஸ்கர் மாநில பாஜக அரசு அல்லது மத்திய பாஜக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்று பொருந்திருந்தே பார்க்க வேண்டும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com