

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான கவுதம் அதானி, சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2,450 கோடி) லஞ்சம் கொடுத்ததாக கடந்த 2024-ம் ஆண்டு அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை நீதித்துறை தாக்கல் செய்தது. அதில் சூரிய மின்சக்தி விநியோக திட்டங்களுக்கு அமெரிக்க வங்கிகள்-முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகளை அதானி குழுமம் திரட்டியது.
இதில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்க வங்கிகள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து அதானி குழுமம் நிதி திரட்டியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் அதை கவுதம் அதானி மறுத்தார். அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் தொடுத்துள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அதானி குழுமம் கடந்த மாதம் அமெரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதை கோர்ட்டு விசாரணைக்கு எடுத்து கொண்டது. இந்த வழக்கை முடித்துக்கொள்ளவும், இந்தியா - அமெரிக்கா மத்தியிலான உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்கவும், கவுதம் அதானி 6 மில்லியன் டாலரும் மற்றும் அவரது உறவினர் சாகர் 12 மில்லியன் டாலரும் செலுத்தி வழக்கை முடிவுக்கு கொண்டு வர மனு கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே அதானி மீதான வழக்கை கைவிடுவது தொடர்பாக அமெரிக்க நீதித்துறையின் தலைமையகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், வழக்கை முன்னெடுத்து செல்வதற்கான ஆதாரங்கள் அரசு தரப்பிடம் இல்லை என்று அதானி குழுமம் தரப்பில் இருந்து சில சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
மேலும் அதானி மீதான குற்றச்சாட்டுகளை அரசு கைவிட்டால் அமெரிக்காவில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யவும், 15 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அதானி தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் கவுதம் அதானி மீதான வழக்கை கைவிட அமெரிக்க நீதித்துறையின் மூத்த அதிகாரிகள் ஒப்பு கொண்டுள்ளதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில், சரணடைந்த பிரதமர் வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்யவில்லை. ஆனால் பேரம் பேசி அதானியை விடுவித்து உள்ளார் என்று கூறி உள்ளார்.