

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களையும் குறிவைத்து ஈரான் பயங்கரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
அத்துடன் மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கத்தார் போன்ற நாடுகள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. இது உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு மேலாக உலகின் முக்கியமான கடல்வழி போக்குவரத்துக்கான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. அதன் வழியாக செல்லும் எதிரிகளின் கப்பல்களை வீழ்த்துவோம் என்று ஈரான் சூளுரைத்துள்ளது. இதனாலும் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை ஈரான் மதிக்கவில்லை.
இதனால் கோபம் அடைந்த டிரம்ப், ஈரானில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் குறிவைத்து தாக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
ஆனால் திடீர் யு டர்ன் அடித்த டிரம்ப், ஈரானில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் குறிவைத்து தாக்கப்படும் என்ற திட்டம் 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என்று அறிவித்தார்.
மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு, ஆக்கப்பூர்வாக விவாதம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் தொடருவதற்காக தாக்குதல் திட்டம் 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் ஈரானின் பதிலடிக்கு அஞ்சியே அமெரிக்கா பின்வாங்கிவிட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்கியதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
பேச்சுவார்த்தை நடந்து வருவதால் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை 5 நாட்கள் நிறுத்துவதாக ட்ரம்ப் கூறிய நிலையில், இஸ்பஹான் நகரில் உள்ள LPG நிர்வாகக் கட்டிடம், கோர்ரம்ஷஹர் நகரில் உள்ள எரிவாயுக் குழாய் குறிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.