அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...

அமெரிக்க ஃபெடரல் வங்கியின் கொள்கை அறிக்கையை 130 வார்த்தைகளாகச் சுருக்கி புதிய தலைவர்!
KevinWarsh
Published on

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் அமைப்பின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கெவின் வார்ஷ் தலைமையில், நிதித்துறைக் கொள்கைக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமெரிக்காவின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், அது 3.5% முதல் 3.75% என்ற அளவிலேயே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், புதிய தலைவரின் கடுமையான நிதிக்கொள்கைகள், வங்கியின் உள் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் புதிய தகவல் தொடர்பு பாணி ஆகியவை உலகளாவிய முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

கெவின் வார்ஷ் கூட்டத்தின் 5 முக்கிய முடிவுகள்..

வட்டி விகிதம் தற்போதைக்கு மாற்றம் இல்லை, ஆனால் உயர வாய்ப்பு..

சந்தை எதிர்பார்த்தபடியே வட்டி விகிதம் மாறாமல் வைக்கப்பட்டாலும், எதிர்கால வட்டி விகிதத்தை கணிக்கும் "டாட் பிளாட்" வரைபடம் கொள்கை வகுப்பாளர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழுவில் உள்ள பாதியினர் வட்டி விகிதம் இப்படியே நீடிக்கலாம் அல்லது குறையலாம் எனக் கருதினாலும், மீதமுள்ளோர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் 0.25% வட்டி விகிதம் உயரக்கூடும் என்று கணித்துள்ளனர்.

இதனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வங்கி இன்னும் தீவிரமாகச் செயல்படும் என்பது உறுதியாகியுள்ளது.

எதிர்கால வட்டி கணிப்பை நிராகரித்த வார்ஷ்..

முந்தைய தலைவர்களைப் போல இல்லாமல், கெவின் வார்ஷ் தனது சொந்த வட்டி விகித கணிப்பை சமர்ப்பிக்க மறுத்துவிட்டார்.

முன்கூட்டியே எதிர்கால வட்டி பற்றி கணிப்புகள் வழங்குவது, பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கும் வங்கியின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் என்று வாதிட்டார்.

இதனால் இனிவரும் காலங்களில் ஃபெடரல் வங்கியின் அடுத்தகட்ட நகர்வுகளைக் கணிப்பது முதலீட்டாளர்களுக்குச் சவாலாக இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

பணவீக்கக் கட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம்..

வார்ஷ் வட்டி விகிதத்தைக் குறைப்பார் என்று எதிர்பார்த்த முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அவர் தனது செய்தியாளர் சந்திப்பில் "விலை ஸ்திரத்தன்மைக்கு" அதிக முக்கியத்துவம் அளித்தார்.

பணவீக்கத்தை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வருவதில் வங்கி உறுதியாக உள்ளதால், அமெரிக்காவின் 2 ஆண்டு கருவூலப் பத்திரங்களின் லாபம் கணிசமாக உயர்ந்துள்ளது.

சுருக்கப்பட்ட அறிக்கை மற்றும் வங்கியின் தனித்தன்மை..

வழக்கமாக 300 வார்த்தைகளுக்கும் அதிகமாக இருக்கும் ஃபெடரல் வங்கியின் கொள்கை அறிக்கை, இந்த முறை வெறும் 130 வார்த்தைகளாகச் சுருக்கப்பட்டு, மிகவும் நேரடியான பாணியில் வெளியிடப்பட்டது.

வங்கியின் அரசியல் தனித்தன்மை குறித்துப் பேசிய வார்ஷ், அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் பேசியது குறித்துப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

ஆனால், நாட்டின் நிதித்துறைச் செயலர் ஸ்காட் பெசென்ட் உடன் வழக்கமான காலை உணவு கூட்டங்கள் மூலம் தொடர்ந்து ஆலோசித்து வருவதை உறுதிப்படுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com